''தமிழக அரசு சார்பில் முதல் முறையாக சென்னை அருகே கடலுக்கடியில் கடல் உயிரின அருங்காட்சியம் அமைக்கப்படுகிறது'' என்று தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேஷ் ராஜன் கூறியுள்ளார்.
கன்னியாகுமரியில் இன்று அமைச்சர் சுரேஷ் ராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழக அரசு முதன் முறையாக சென்னை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் கடலுக்கடியில் கடல் உயிரின அருங்காட்சியம் தனியார் உதவியுடன் அமைக்கப்பட உள்ளது.
இரவு நேரங்களில் பொதுமக்கள் சுற்றி பார்ப்பதற்கு வசதியாக வண்டலூர் உயிரியல் பூங்கா ரூ.5 கோடியில் மேம்படுத்தப்படுகிறது. மேலும் சென்னை சிறுவர் பூங்காவில் வண்ணத்துப்பூச்சி பூங்கா ஒன்றும் அமைக்கப்படுகிறது.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்காக சென்னை- திருப்பதி, சென்னை-புதுச்சேரி, மதுரை-கொடைக்கானல், திருவனந்தபுரம்- கன்னியாகுமரி ஆகியவற்றுக்கு இடையே சுற்றுலா ஹெலிகாப்டர் சேவை அறிமுகப்படுத்தப்படுகிறது என்று அமைச்சர் சுரேஷ் ராஜன் தெரிவித்தார்.