முல்லைப்பெரியாற்றில் புதிய அணை கட்டவிருப்பதாகவும், இது தொடர்பாக தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும் கேரள முதல்வர் கூறியுள்ளார். இந்த விடயத்தில் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்று தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பாலாற்றின் குறுக்கே அணைக்கட்டப் போவதாக ஆந்திர அரசு தொடர்ந்து கூறி வருகிறது. இதனை தமிழகம் சட்ட ரீதியாக எதிர்கொள்ளும். இதேபோல முல்லைப்பெரியாற்றில் புதிய அணை கட்டவிருப்பதாகவும், இது தொடர்பாக தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும் கேரள முதல்வர் கூறியுள்ளார்.
இந்த விடயத்தில் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை. இதில் தொடர்ந்து லாவணி பாடவும் விரும்பவில்லை. புதிய அணையை கேரளா கட்ட முடியுமா? கட்ட முடியாதா? என்பது எனக்கு நன்றாக தெரியும்.
சென்னை நகரின் குடிநீர் பிரச்சினையை தீர்க்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தெலுங்கு கங்கை திட்டத்தின்கீழ் ஆந்திராவிலிருந்து வரும் கிருஷ்ணா நதிநீரை தேக்கி வைக்க இடமில்லாததால், அவ்வப்போது அது நிறுத்தப்படுகிறது.
எனவே கிருஷ்ணா நீரை தேக்கி வைக்க வசதியாக வடசென்னையில் (திருவள்ளூர் மாவட்டம்) ராமன்சேரி, திருக்கண்டலம் ஆகிய இடங்களில் இரண்டு சிறிய புதிய அணைகள் கட்டப்பட உள்ளன. இதற்கு சில இடையூறுகள் இருந்தாலும் அவற்றை அகற்றி புதிய அணைகள் விரைவில் கட்டி முடிக்கப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.