வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கலின் போது தவறான தகவல் கொடுத்தால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா கூறினார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா கூறுகையில், தமிழகத்தில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது பெயர் சேர்த்தல், நீக்கல் பணிகள் நியாயமாகவும், பயமின்றியும் நடக்க வேண்டும் என அனைத்து வாக்காளர் பதிவு அதிகாரிகளுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. யாராவது வாக்காளர் பதிவு அதிகாரியிடம் தவறான தகவல்களை தெரிவித்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது குற்றவியல் (கிரிமினல்) நடவடிக்கை எடுக்கப்படும்.
வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் (என்.ஆர்.ஐ) ஆண்டுக்கு குறைந்தபட்சம் 6 மாதங்களாவது இந்தியாவில் தங்கி இருந்திருக்கவேண்டும். அப்போது தான் அவர்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க முடியும், இல்லையேல் அவர்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க முடியாது. திருவிழா நேரத்திலும், தேர்தல் நேரத்திலும் மட்டுமே வெளிநாட்டில் இருந்து வருவோரை சேர்க்க முடியாது.
புகைப்பட வாக்காளர் அடையாள அட்டையை பொறுத்தவரை அனைத்து மாவட்டங்களிலும் நல்ல முன்னேற்றம் உள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 11ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில் ஓரிரு மாதங்கள் காலதாமதமாகலாம். மின்னஞ்சல் மூலம் வாக்காளர் பெயர் பதிவுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது என்று தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா கூறினார்.