இலங்கை ராணுவத்திற்கு ஆயுத உதவிகளை செய்வதை இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், ஏற்கனவே வழங்கிய ரேடார்களை திரும்ப பெற வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கடிதம் எழுதியுள்ளார்.
பிரதமருக்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இன்று எழுதியுள்ள கடிதத்தில், பாக் நீரிணையில் ஒருபோதும் இலங்கை கடற்படை வேண்டுமென்றே இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தவில்லை. பன்னாட்டு கடல் எல்லையில் இலங்கை கடற்படைக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடக்கின்ற துப்பாக்கி சண்டையில் இந்திய மீனவர்கள் வந்து மாட்டிக் கொள்கிறார்கள்.
மேலும் மீனவர்கள் குற்றம் சாட்டுவது போல இலங்கை கடற்படை படகுகள் ஒருபோதும் இந்திய கடல் எல்லைக்கு உள்ளே வந்து இந்திய மீனவர்களை தாக்கியது இல்லை' என்று இந்திய கடற்படையின் தமிழ்நாடு பொறுப்பாளர் கமோடர் வேன் ஹேல்டரென் கூறியதாக பத்திரிகைகளில் வெளியாகி உள்ள நியாயப்படுத்த இயலாத, உண்மையில்லாத, பொறுப்பற்ற கருத்துக்களை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். கடற்படையினர் இவ்வாறு இலங்கை அரசுக்கு ஆதரவாக அறிக்கைகள் வெளியிட்டும், கருத்துக்களை வெளியிட்டும் வருவது மிகுந்த கவலையை அளிக்கிறது. அவர்கள் இந்திய கடற்படையில் பணியாற்றுகிறார்களா? அல்லது இலங்கை கடற்படைக்காக பணியாற்றுகிறார்களா? என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.
இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தாக்கப்பட்டது குறித்து இந்திய அரசே நாடாளுமன்றத்தில் பல முறை ஒப்புக் கொண்டுள்ளது. இலங்கை கடற்படைக்கு உதவ வேண்டும் என்று திட்டமிட்ட நோக்கத்துடன், இந்தியா செயல்படுவதும், இந்திய கடற்படை அதிகாரிகள், எல்லையை மீறி கருத்துக்களை வெளியிட்டு இலங்கையை ஆதரிப்பதும் எதைக் காட்டுகிறதென்றால், நேருவால் வகுக்கப்பட்டு, இந்திரா காந்தியால் செயல்படுத்தப்பட்ட இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை குழிதோண்டி புதைக்கப்பட்டு விட்டதோ என்பதைத்தான் காட்டுகிறது.
அதைவிடக் கொடுமை, இந்திய கடற்படையினர் இந்திய மீனவர்களைப் பாதுகாப்பதற்காக எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொண்டது இல்லை. ஒரு முறையேனும் இலங்கை கடற்படைக்கு அவர்கள் எச்சரிக்கை கூட விடுத்ததும் இல்லை. எனவே, இலங்கை படையினருக்கு ஆயுத உதவிகள் செய்வதை இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், ஏற்கனவே இலங்கை விமானப்படைக்கு வழங்கிய ரேடார்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும், தங்கள் எல்லையை மீறிச் செயல்பட்டு வருகின்ற இந்திய கடற்படை அதிகாரிகளை எச்சரிக்கை செய்ய வேண்டும் என்றும் தங்களை கேட்டுக் கொள்கிறேன் என்று வைகோ தனது கடிதத்தில் கூறியுள்ளார்.