''அன்புமணியை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும்'' என்று பிரதமருக்கு புதிய தமிழகம் கட்சித் தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமருக்கு, புதிய தமிழகம் தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமி எழுதியுள்ள கடிதத்தில், கிராமப்புற சேவை என்ற பெயரில் மருத்துவ மாணவர்களின் படிப்பு காலத்தை ஐந்தரை ஆண்டிலிருந்து ஆறரை ஆண்டுகளாக உயர்த்தக் கூடாது என்று மருத்துவ மாணவர்கள் கோருவது நியாயமானது. அவர்களுக்கு விரோதமாக அமைச்சர் நடந்துகொள்வது முறையல்ல. அவரது பேச்சு மாணவர்களின் சந்தேகங்களைப் போக்குவதாக இல்லை, மாறாக ஆத்திரமூட்டக் கூடியதாக விளங்குகிறது.
அன்புமணி தனி நபர் அல்ல; கூட்டுப் பொறுப்பு வாய்ந்தவர். அவரது நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவது பிரதமரின் கடமையாகும். இல்லையேல் மத்திய அரசுக்கே அவப் பெயரை உருவாக்கும். தங்கள் தலைமையிலான அமைச்சரவைக்கும் மத்திய அரசுக்கும் அவப் பெயர் வராவண்ணம் தடுக்க அன்புமணியை சுகாதாரத்துறை அமைச்சர் பொறுப்பிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று கிருஷ்ணசாமி அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.