சென்னை அண்ணா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஹாங் காங்குக்கு கடத்த முயன்ற ரூ.15 லட்சம் ஹவாலா பணத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை சேர்ந்த அப்துல் காதர் கனி (46) என்பவர் நேற்று இரவு 11.45 மணிக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் ஹாங் காங் செல்வதற்காக சென்னை அண்ணா சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது அவர் கொண்டு வந்த பையை சுங்கத்துறை அதிகாரிகள் பரிசோதனை செய்தனர்.
அதில், 11 லட்சம் ரூபாய் யூரோவும், ரூ.4.5 லட்சம் சுவீஸ் பணமும், இந்திய பணம் ரூ.ஒரு லட்சமும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவரிடம் சுங்கத்துறையினர் நடத்திய விசாரணையில் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தார்.
இதையடுத்து அவரை சுங்கத்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, சென்னை மணலியை சேர்ந்த ஒருவர் தன்னிடம் ஹவாலா பணத்தை ஹாங் காங் கொண்டு சென்றால் ரூ.50 ஆயிரம் தவறாத கூறியதையடுத்து பணத்தை கடத்த முயன்றேன் என்று விசாரணையில் அப்துல்காதர் கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து அப்துல் காதரிடம் இருந்து ரூ.15 லட்சம் ஹாவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஹவாலா பணம் கொடுத்து அனுப்பிய மணலி பிரமுகரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என்று சுங்கத்துறை ஆணையர் ராஜன் கூறியுள்ளார்.