''விண்ணப்பித்த தகுதியுடைய அனைவருக்கும் டிசம்பர் இறுதிக்குள் குடும்ப அட்டைகள் வழங்கப்படும்'' என்று உணவுத் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுத் துறையின் செயல்பாடுகள் குறித்தும், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் செயல்பாடுகள் குறித்தும் கடந்த 2 நாட்கள் உணவுத் துறை அமைச்சர் எ.வ.வேலு நடத்திய ஆய்வுக் கூட்டத்தில், அரிசி கடத்தலை அடியோடு ஒழிப்பது பற்றியும், பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட அரிசி கடத்தல்காரர்களை உடனே கைதுவது பற்றியும், கடத்தலில் தொடர்ந்து ஈடுபடுபவர்களை ஒடுக்க காவல் துறையினரையும் பயன்படுத்தவும் வலியுறுத்தினார்.
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அரிசியை கண்காணிக்க துறைமுக பகுதிகளில் உள்ள கிடங்குகளையும், வாகன நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணிக்கவும் அறிவுறுத்தினார். அரிசி கடத்தல் குற்றவாளிகள் மீது குற்றவியல் வழக்கு தொடர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
புதிய குடும்ப அட்டைகள் கோரி விண்ணப்பித்த தகுதியுடைய விண்ணப்பதாரர்களுக்கு 31.12.2007-க்குள் குடும்ப அட்டை வழங்கப்பட வேண்டும் என்றும், குடும்ப அட்டை வழங்க தகுதியில்லாத விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் உடனடியாக தக்க பதில் அனுப்பப்பட வேண்டுமென்றும் அறிவுறுத்தினார் என்று கூறப்பட்டுள்ளது.