மலேசியா விடுதலை பெற்று அரை நூற்றாண்டுக் காலம் ஆகியும் அந்நாட்டின் பொருளாதார வளத்திற்காக பெரும்பங்காற்றிய இந்திய வம்சாவழியினர் எல்லாத் துறைகளிலும் ஓரங்கட்டப்படுவது மட்டுமின்றி, அவர்களை நிரந்தரமாக அடிமைப்படுத்தும் முயற்சி நடந்து வருகிறது என்று மலேசிய இந்தியத் தலைவர் வேதமூர்த்தி கூறினார்!
சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த பி. வேதமூர்த்தி, தங்களது உரிமைக்காகவும், மலேசிய சமூகத்தில் தங்களுக்கும் சமவாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்று கோரி கடந்த 50 ஆண்டுகளாக பல்வேறு அமைதி வழிகளில் மலேசிய இந்தியர் சமூகம் முயன்று வந்ததாகவும், ஆனால், அதற்கெல்லாம் எந்தப் பலனும் கிட்டாத நிலையிலேயே தங்களுடைய நிலையை உலக நாடுகளின் கவனத்திற்கு கொண்டு வருவதற்காக கடந்த நவம்பர் 25 ஆம் தேதி பேரணி நடத்த முற்பட்டதாகக் கூறினார்.
மலேசிய அரசமைப்புச் சட்டத்தின் 10வது பிரிவின்படி, அமைதியாகக் கூடி தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி நடத்த உரிமை உள்ளது என்றும், ஆனால், அதற்கு சட்டத்திற்குப் புறம்பாக அனுமதி அளிக்க மலேசிய அரசு மறுத்துவிட்டது மட்டுமின்றி, அமைதியாகக் கூடிய மக்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிட்டது என்று வேதமூர்த்தி கூறினார்.
மலேசியாவின் முன்னேற்றத்திற்கு 150 ஆண்டுகளாக உழைத்து பங்களித்த வம்சாவழி இந்தியர் சமூகம், எல்லா விதத்திலும் புறக்கணிக்கப்படுகிறது என்பதையும், அந்த நிலையை மாற்றிட வேண்டும் என்பதற்காக பிரிட்டிஷ் அரசின் தலையீட்டை வலியுறுத்தியே லண்டன் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடரப்பட்டதாகக் கூறிய வேதமூர்த்தி, அது தங்களின் கொள்கையின் அடிப்படையிலான ஒரு நடவடிக்கையே தவிர, நிதியை எதிர்பார்த்து போடப்பட்ட வழக்கு அல்ல என்று கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையில் தெளிவுபடுத்தினார்.
கடந்த50 ஆண்டுகளில் வம்சாவழி இந்தியர்களின் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்கள் இடித்துத் தள்ளப்பட்டுள்ளன என்றும், அந்நாட்டில் உள்ள 100 ஆண்டுகளுக்கும் மேலான மசூதிகளை பாரம்பரியச் சின்னங்களாக பாதுகாக்க முற்படும் மலேசிய அரசு, அப்படிப்பட்ட முன்னுரிமையை இந்து கோயில்களுக்கு தர மறுத்து வருகிறது என்று கூறினார்.
கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற முதுமொழியைக் கொண்ட தமிழகத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்டு மலேசியாவில் குடியேற்றப்பட்ட வம்சாவழி இந்தியர்கள், காடுகளை அழித்து கிராமங்களை சமைத்தபோது, அங்கு தாங்கள் வணங்கும் கடவுள்களின் கோயில்களைக் கட்டி சமூகத்தை உருவாக்கினர் என்றும், அப்படிப்பட்ட கோயில்களை சட்டத்திற்குப் புறம்பானவை என்று அகற்றிவரும் மலேசிய அரசு, சாக்கடைகளுக்கு அருகில் மாற்று இடம் ஒதுக்கி தந்துள்ளது என்று கூறிய வேதமூர்த்தி, இப்படிப்பட்ட ஒரு நிலை உலகில் வேறு எங்காவது உண்டா என்று கேள்வி எழுப்பினார். மலேசியாவில் வம்சாவழி இந்தியர்கள் சிறுபான்மையினராக உள்ள நிலையில், எவ்வாறு உங்களுடை பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பீர்கள் என்று கேட்டதற்கு, மலேசியாவிற்குள் போராட்டங்களை நடத்துவதன் மூலமும், உலக நாடுகளின் ஆதரவுகளைப் பெற்று அழுத்தம் தருவதன் மூலமும் தங்களுடைய பிரச்சனைகளுக்குத் தீர்வு கிட்டும் என்று எதிர்பார்ப்பதாக வேதமூர்த்தி பதிலளித்தார்.
இந்துக்கள் உரிமை நடவடிக்கை அமைப்பு என்றழைக்கப்படும் ஹின்டிராஃப் அமைபபை உருவாக்கியுள்ள வேதமூர்த்தி, தங்களுடைய உரிமைப் போராட்டம் அமைதி வழியில்தான் நடத்தப்படும் என்றும், தாங்கள் காந்திய வழியில் போராட்டத்தை நடத்துவோம் என்பதனை உலகிற்கு காட்டவே காந்தியின் படத்துடன் பேரணியில் பலர் பங்கேற்றதாகவும், பேரணிக்கு முன் கைது செய்யப்பட்டு தான் சிறையில் அடைக்கப்பட்ட போது 3 நாட்கள் உண்ணாவிரத்தை மேற்கொண்டதாகவும் கூறினார்.
எங்களுடைய உரிமைப் போரில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என்பதனையும், எங்களது போராட்டம் அமைதி வழியில் மட்டுமே நடைபெறும் என்பதனையும் நவம்பர் 25 பேரணியின் மூலம் நிரூபித்துள்ளோம் என்று வேதமூர்த்தி கூறினார்.
வெள்ளையர் கடைபிடித்த பிரித்தாளும் சூழ்ச்சியையே மலேசிய அரசும் வம்சாவழி இந்தியர்களுக்கு எதிராக கடைபிடித்து வருகிறது என்று கூறிய வேதமூர்த்தி, பொருளாதார ரீதியாக பல வழிகளிலும், இந்தியாவைச் சார்ந்துள்ள மலேசிய அரசிற்கு நெருக்கடி அளித்து அது மேற்கொண்டுவரும் மனித உரிமை மீறல்களை இந்தியா தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே தங்களது எதிர்பார்ப்பு என்று கூறினார்.
தங்களுடைய போராட்டத்திற்கு மலேசிய சீனர்கள் மத்தியிலும், மலாய் இஸ்லாமியர்கள் மத்தியிலும் ஆதரவு உள்ளது என்று வேதமூர்த்தி கூறினார்.