முதலமைச்சர் கருணாநிதியின் வேண்டுகோளை ஏற்று மருத்துவ மாணவர்களிடம் அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்திய பின் போராட்டம் கைவிடப்படுவதாக இன்று மருத்துவ மாணவர்கள் அறிவித்துள்ளனர்.
மருத்துவ படிப்பை ஐந்தரை ஆண்டில் இருந்து ஆறரை ஆண்டாக உயர்த்துவதை கண்டித்தும், கட்டாய கிராம சேவையை கண்டித்தும் மருத்துவ மாணவர்கள் கடந்த மாதம் 15ம் தேதி முதல் உண்ணாவிரதம் உள்பட பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில் முதலமைச்சர் கருணாநிதி, மருத்துவ மாணவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இந்த பிரச்சனை தொடர்பாக பிரதமர், சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு கடிதம் எழுதுவதாக முதல்வர் உறுதி அளித்தார்.
இதைத் தொடர்ந்து மருத்துவ மாணவர்கள் போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்தனர். ஆனாலும் மருத்துவ மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். அவர்கள் போராட்டத்ைத தீவிரப்படுத்தினர்.
இந்த நிலையில் முதலமைச்சர் கருணாநிதி விடுத்த வேண்டுகோளை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மாணவர்கள் நேற்று மாநில சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து தஞ்சாவூர், மதுரை, சேலம், திருச்சி, தேனி, கன்னியாகுமரி, வேலூர், சென்னை ஆகிய மருத்துவ கல்லூரிகளின் மாணவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிடுவதாக நேற்று அறிவித்தனர்.
முதலமைச்சர் கருணாநிதி விடுத்துள்ள வேண்டுகோளை உறுதிமொழியாக ஏற்று தங்களது போராட்டத்தை கைவிடுவதாகவும், புறநோயாளிகள், மருத்துவ மாணவர்கள், பொதுமக்களின் நலன்களை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக போராட்டம் நடத்தி வந்த மாணவர்கள் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசு மருத்துவ படிப்பை உயர்த்த முயற்சிக்குமானால் நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றும் மாணவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
14 மருத்துவக் கல்லூரிகளில் 8 மருத்துவ கல்லூரிகள் போராட்டத்தை கைவிட்டுள்ளது. மற்ற 8 மருத்துவ கல்லூரிகளும் போராட்டத்தை கைவிடுவது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். அவர்கள் இன்று போராட்டத்தை கைவிடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போராட்டம் கைவிடப்பட்டதை தொடர்ந்து இன்று முதல் மாணவர்கள் வகுப்புகளுக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.