பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அசம்பாவித சம்பவம் நிகழ்வதற்கு முன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6ஆம் தேதி அன்று தீவிரவாதிகள் அசம்பாவித செயல்களில் ஈடுபட உள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்திலும் முக்கிய இடங்களில் காவல்துறையினர் பாதுகாப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். சென்னையில் அனைத்து பகுதிகளிலும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் மக்கள் அதிகமாக கூடும் திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோவில், வடபழனி முருகன் கோவில், மசூதி, சர்ச்சுகளிலும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதேபோல் சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் பயணிகள் தீவிர சோதனைக்கு பின்னே அனுமதிக்கப்படுகின்றனர்.
இதற்கிடையே டிசம்பர் 6ஆம் தேதி வரை திரையரங்குக்கு வரும் ரசிகர்களும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட உள்ளனர். இதேபோல் திருச்சி, மதுரை, கோவை உள்பட தமிழகத்தில் உள்ள முக்கிய கோயில்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.