போராட்டத்தை கைவிட்டு விட்டு வரும் 3ஆம் தேதிக்குள் (இன்று) மருத்துவ மாணவர்கள் கல்லூரிக்கு திரும்ப வேண்டும் என்று அரசு அறிவித்திருந்தது. ஆனால் மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசு அறிவித்த கெடு இன்றுடன் முடிவடைந்துள்ளால் மருத்துவ கல்லூரி, விடுதிகளை மூட அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
மருத்துவ படிப்பை ஐந்தரை ஆண்டில் இருந்து ஆறரை ஆண்டாகவும், கிராம சேவை செய்வதை கட்டாயம் ஆக்குவது குறித்து மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு மருத்துவ கல்லூரி மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் 15ஆம் தேதியில் இரந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் மருத்துவ மாணவர்கள், பொது மக்களின் கருத்தை அறிய சாம்பசிவராவ் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஒவ்வொரு மாநிலமாக சென்று கருத்து கேட்டு வருகின்றனர்.
இதனிடையே போராட்டம் நடத்தி மாணவர்களிடம் முதலமைச்சர் கருணாநிதி பேச்சவார்த்தை நடத்தினார். அப்போது, மாணவர்களின் நியாயமான கோரிக்கை நிறைவேற மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவேன் பிரச்சினை தீர முயற்சி செய்வேன்'' என்று கூறினார். இதையடுத்து, போராட்டம் கைவிடப்படுவதாக அறிவிப்பு வெளியானது. என்றாலும் தொடர்ந்து போராட்டம் நடக்கிறது. அவர்களின் போராட்டத்திற்கு பல்வேறு கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்நிலையில் மருத்துவ மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டுவிட்டு டிசம்பர் 3ஆம் தேதிக்குள் (இன்று) கல்லூரிக்கு திரும்ப வேண்டும். இல்லையென்றால் மாணவர்களின் விடுதிகள், மருத்து கல்லூரிகள் மூடப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால் மாணவர்கள் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.
இதையடுத்து, தமிழக அரசு விதித்த கெடு இன்றுடன் முடிவடைந்ததால் மாநிலம் முழுவதும் உள்ள மாணவ- மாணவியர் தங்கும் விடுதி, மருத்துவ கல்லூரிகள் ஆகியவற்றை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டது. காலை 10 மணிக்கு பிறகு விடுதிகளும், கல்லூரிகளும் மூடப்பட்டன. இதனிடையே மாணவர்கள் தங்களுடைய நண்பர்கள் வீடுகளிலும், திருமண மண்டபங்களிலும், தனியார் விடுதிகளிலும் தங்கி போராடுவோம் என்று கூறியுள்ளனர்.