பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தாமல் சென்ற தனியார் பேருந்தை அடித்து நொறுக்கி, நடத்துனரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றதாக ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் மீது கொடுமுடி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஈரோட்டில் இருந்து கரூருக்கு தனியார் பேருந்துகள் அதிகமாக இயக்கப்படுகிறது. இந்த பேருந்துகள் போட்டியின் காரணமாக பெரும்பாலும் சாதாரணமாக நிறுத்தத்தில் நிற்பதில்லை. குறிப்பாக வெங்கமேடு பயணிகளை ஏற்றுவதில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பாதிப்படைந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தனியார் பேருந்து வெங்கமேடு வழியாக சென்றது. பேருந்தை முருகேசன் (31) ஓட்டினார்.
வெங்கமேடு நிறுத்தத்தில் பத்துக்கும் மேற்பட்டோர் பேருந்தை வழிமறித்து அடித்து நொறுக்கினர். ஓட்டுநர் முருகேசன், நடத்துனர் முருகன் ஆகியோரை இரும்பு கம்பியால் தாக்கினர். பின் கத்தியால் கொலை செய்ய முயன்றுள்ளனர். காயமடைந்த நடத்துனர் முருகன் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுதொடர்பாக ஓட்டுநர் முருகேசன் கொடுமுடி காவல்நிலையத்தில் புகார் செய்தார். வெங்கமேடை சேர்ந்த ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் குழந்தைவேல், சண்முகம், சுதாகர், சிலிண்டர் ராஜா மற்றும் பத்து பேர் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.