எங்கள் போராட்டம் தமிழக அரசுக்கு எதிரானது அல்ல. கிராமப்புற சேவை திட்டத்தை கைவிடும் வரை மத்திய அரசுக்கு எதிரான எங்கள் போராட்டம் தொடரும். எக்காரணத்தை கொண்டும் போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று மாணவர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
மருத்துவ படிப்பை ஐந்தரை ஆண்டில் இருந்து ஆறரை ஆண்டாக உயர்த்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கட்டாய கிராமப்புற சேவையை கண்டித்தும் மருத்துவ மாணவர்கள் கடந்த மாதம் 15ஆம் தேதியில் இருந்து உண்ணாவிதரம், மொட்டை அடித்தல் உள்பட பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். நேற்று மாணவர்களுக்கு ஆதரவாக அவர்களின் பெற்றோரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர்கள் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்கள் ஆதரவை தெரிவித்தன. இதனால் மாணவர்கள் போராட்டம் தீவிரம் அடைந்தது. இந்நிலையில் தமிழக அரசு மருத்துவ மாணவர்களுக்கு கெடு விதித்து நேற்று அறிவிப்பு வெளியிட்டது. மாணவர்கள் பிரச்சினை குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டு இருப்பதாகவும், அதன் முடிவினை எதிர்பார்த்து காத்து இருப்பதாகவும் மத்திய சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் மாணவர்கள் போராட்டத்தை தொடர வேண்டிய அவசியம் இல்லை. நாளை (3ஆம் தேதி) மாணவர்கள் கல்லூரிகளுக்கு திரும்பாவிட்டால் கல்லூரிகளையும், விடுதிகளையும் தற்காலிகமாக மூடப்போவதாக அரசு அறிவித்தது.
அரசின் இந்த எச்சரிக்கையை தொடர்ந்து மாணவர்கள் கூட்டமைப்பு அவசரமாக கூடி ஆலோசனை நடத்தியது. அதன் பிறகு மாணவர்கள் கூறுகையில், எங்கள் போராட்டம் தமிழக அரசுக்கு எதிரானது அல்ல. அமைதியான முறையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. கிராமப்புற சேவை திட்டத்தை கைவிடும் வரை மத்திய அரசுக்கு எதிரான எங்கள் போராட்டம் தொடரும். எக்காரணத்தை கொண்டும் போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
மாணவர்கள் போராட்டம் தொடரும் என்று அறிவித்து இருப்பதால் அடுத்த கட்ட நடவடிக்கையில் அரசு இறங்கி உள்ளது. நாளை போராட்டம் தொடர்ந்தால் கல்லூரிகளையும், விடுதிகளையும் தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து மருத்துவ கல்லூரிகளுக்கும் மருத்துவ கல்வி இயக்குனர் அலுவலகம் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.