இந்த சட்டத்தினால் மருத்துவ மாணவர்களுக்கு எந்தவொரு பாதகமும் வராது. அப்படி பிரச்சனை இருந்தால் என்னிடம் அல்லது அன்புமணியிடம் வாருங்கள் தீர்த்து வைப்போம் என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறினார்.
நாகர்கோவிலில் இன்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், மருத்துவக்கல்லூரி மாணவர்கள் கடந்த செப்டம்பர் மாதம் 3ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால் அரசு இதை கண்டுகொள்ளவில்லை. அரசு தனது கடமையில் இருந்து முற்றிலும் தவறி உள்ளது. சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தியபோது மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர். ஆனால் 3 மாதமாக மருத்துவக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தமிழகத்தில் சுகாதாரத்துறை உள்ளதா? என்று மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. சுகாதாரத்துறைக்கான அமைச்சர், செயலாளர் இருக்கிறார்களா? என்று கேள்வி எழுந்துள்ளது.
மத்திய அரசு புரட்சிகரமான திட்டத்தை வரவேற்கிறது. ஒரு ஆண்டு கட்டாய சிற்றூர் சேவையை ஓராண்டுக்கு பதிலாக 2 ஆண்டாக உயர்த்த வேண்டும். தற்போது ஓராண்டு என்று குறிப்பிட்டுள்ளது 4 மாதம் சுகாதார மையத்திலும், 4 மாதம் தாலுகா தலைமை மருத்துவமனையிலும், 4 மாதம் மாவட்ட மருத்துவமனையிலும் என்றுதான் குறிப்பிடப்பட்டு உள்ளது. அதைப்பார்க்கும்போது 4 மாதம் மட்டுமே கிராப்புறங்களில் பணியாற்ற வேண்டிய சூழ்நிலை வரும். மருத்துவ பட்டமேற்படிப்பு படிக்க வேண்டும் என்றால் தனியார், அரசு மருத்துவக்கல்லூரியாக இருந்தால் குறைந்தளவு 3 ஆண்டுகள் கிராமத்தில் பணிபுரிதல் என்று இந்திய மருத்துவ கழகத்தில் விதி கொண்டு வரவேண்டும்.
மகாராஷ்டிரா, கேரளா மற்றும் மேற்கு வங்காளத்தில் 3 ஆண்டுகள் கிராமப்புறங்களில் பணியாற்ற வேண்டும் என்று சட்டம் உள்ளது. சொட்டை வரும் வரை படிக்க வேண்டுமா என்று கேட்கிறார்கள். தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 15 ஆயிரத்து 500 பேர் எம்.பி.பி.எஸ். படித்து விட்டு அரசின் வேலைக்காக சொட்டை விழும் வரை காத்து இருக்கிறார்கள்.
அரசியல்வாதிகளுக்கு மருத்துவக்கல்லூரி வளாகத்துக்குள் என்ன வேலை? போராட்டத்தை சில அரசியல் கட்சிகள் தூண்டி விடுகின்றன. 3 கோடியே 49 லட்சத்து 21 ஆயிரத்து 681 மக்கள் தமிழகத்தில் சிற்றூர் புறத்தில் உள்ளனர். இவர்களுக்கு சேவை செய்ய மறுக்கிறீர்கள். மாணவர்களுக்கு இந்த சட்டத்தினால் எந்தவொரு பாதகமும் வராது. மாணவர்கள் படிப்பை தொடர வேண்டும். பிரச்சனை இருந்தால் என்னிடம் அல்லது அன்புமணியிடம் வாருங்கள், தீர்த்து வைப்போம் என்று ராமதாஸ் கூறினார்.