''மருத்துவ மாணவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டுவிட்டு டிசம்பர் 3ஆம் தேதிக்குள் கல்லூரிகளுக்கு திரும்பாவிட்டால், அன்று முதல் கல்லூரிகளையும், விடுதிகளையும் தற்காலிகமாக மூடுவதைத் தவிர அரசுக்கு வேறு வழியில்லை'' என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மருத்துவக் கல்லூரி மாணவர்களின் படிப்புக் காலத்தை 6 ஆண்டுகளாக மத்திய அரசு நீடித்ததைத் தொடர்ந்து அந்த மாணவர்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய போது தமிழக முதலமைச்சர் பிரதிநிதிகளை தலைமைச் செயலகத்தில் சந்தித்து, இந்தப் பிரச்சினை குறித்து மத்திய அரசுக்கு தானே கடிதம் எழுதுவதாகவும், உண்ணாவிரதப் போராட்டத்தைத் திரும்பப் பெற வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டதின் பேரில், அவர்கள் போராட்டத்தை கை விடுவதாக செய்தியாளர்களிடம் தெரிவித்த போதிலும், இந்நாள் வரை போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
முதலமைச்சர் மாணவர்களிடம் உறுதியளித்தவாறு பிரதமருக்கும், மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்திற்கு பதில் எழுதிய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் இந்தப் பிரச்சினை குறித்த குழு நியமிக் கப்பட்டுள்ளதாகவும், அதன் முடிவினை எதிர்பார்த் திருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
இந்த நிலையில் மாணவர்கள் தங்கள் போராட்டத்தைத் தொடர வேண்டிய அவசியம் இருப்பதாகத் தெரியவில்லை. எனவே மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு உடனடியாக கல்லூரிகளுக்குத் திரும்பி தங்கள் படிப்பினைத் தொடர வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. டிசம்பர் 3ஆம் தேதிக்குள் மாணவர்கள் கல்லூரிகளுக்கு திரும்பாவிட்டால், அன்று முதல் கல்லூரிகளையும், விடுதிகளையும் தற்காலிகமாக மூடுவதைத் தவிர அரசுக்கு வேறு வழியில்லை என்பதும் இதன் மூலம் அறிவிக்கப் படுகின்றது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.