பாலாற்றின் குறுக்கே அணை கட்ட முயற்சிக்கும் ஆந்திர அரசை கண்டித்தும், அணை கட்டுவதை தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகளை யும் வேலூரில் இன்று ம.தி.மு.க. சார்பில் வைகோ தலைமையில் உண்ணாவிரதம் நடைபெற்றது.
பாலாற்றின் குறுக்கே அணை கட்ட ஆந்திர மாநில அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா சில நாட்களில் நடைபெற உள்ளது. ஆந்திர மாநில அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்தும், பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவதை தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகள் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியும் ம.தி.மு.க. சார்பில் இன்று வேலூரில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
இந்த உண்ணாவிரதத்திற்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தலைமை வகித்தார். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஏராளமான ம.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.
வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் பி.என்.உதயகுமார், மேற்கு மாவட்ட செயலாளர் பன்னீர், திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் ராஜா, காஞ்சி மாவட்ட செயலாளர் சோமு, விழுப்புரம் மாவட்ட செயலாளர் மாசிலாமணி, கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் மாத்தையன், கட்சியின் துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, ஆட்சி மன்ற குழு உறுப்பினர் கே.சி.அழகிரி, தலைமைக் கழக செயலாளர் ராதாகிருஷ்ணன், வேலூர் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் பழனி, துணை செயலாளர்கள் ஆனந்தன், நேதாஜி ஆகியோர் உட்பட முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் இந்த உண்ணாவிரத்ததில் கலந்து கொண்டனர்.
ம.தி.மு.க மாநில அமைப்புச் செயலாளர் சுப்பிரமணி வரவேற்புரை ஆற்றினார். நகர செயலாளர் கவுதமன் நன்றி கூறினார். மாலை 5 மணி அளவில் அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் செம்மலை உண்ணாவிரதத்தை முடித்து வைக்கிறார்.