இந்தியாவில் இருந்து மலேசியா செல்வோருக்கு விசா வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது ஏன்? என்பது குறித்து மலேசிய உயர் அதிகாரி கருணாகரன் விளக்கம் அளித்தார்.
மலேசியாவில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் உள்ளனர். அவர்கள் பல தலைமுறைகளாக அங்கு வசித்து வருகிறார்கள். மலேசியாவை விட்டு ஆங்கிலேயர்கள் வெளியேறியபோது அந்த நாட்டு அரசிடம் தமிழர்களுக்கான உரிமைகளை வழங்க வேண்டும் என்று கூறிச்சென்றனர். ஆனால், மலேசியாவில் ஆட்சிக்கு வருவோர், உரிமைகளை வழங்கவில்லை என்றும் தாங்கள் 3-ம் தர குடிமக்களாக நடத்தப்படுவதாகவும் மலேசிய தமிழர்கள் தொடர்ந்து புகார் கூறி வந்தனர்.
இந்த நிலையில், கோரிக்கைகளை வலியுறுத்தி சில தினங்களுக்கு முன்பு தலைநகர் கோலாலம்பூரில் தமிழர்கள் ஊர்வலம் நடத்தியபோது காவல்துறையினரால் தாக்கப்பட்டார்கள். மலேசிய தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு முதலமைச்சர் கருணாநிதி கடிதம் எழுதியிருந்தார். இதற்கு, மலேசிய உள்விவகாரத்தில் முதலமைச்சர் கருணாநிதி தலையிடுவதாக கூறி மலேசிய அமைச்சர் முகமது நஸ்ரி அப்துல் அஜீஸ் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், சென்னையில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கம் ஒன்றில் கலந்துகொண்ட மலேசிய தூதரக அதிகாரி நார்லின் ஓத்மனிடம் தமிழர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து கேட்டபோது, காவல்துறையினருக்கும் இந்திய வம்சாவழியினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தை சில ஊடகங்கள் தவறாக சித்திரித்துவிட்டன. இந்த சம்பவம் தொடர்பாக இந்தியா-மலேசியா இடையே அதிகாரப்பூர்மாக பேச்சுவார்த்தை ஏதும் நடத்தப்படவில்லை. அதற்கான தேவையும் இல்லை என்றார்.
இது குறித்து மலேசிய தொழில்மேம்பாட்டு ஆணையத்தின் இயக்குனர் ஜெனரல் கருணாகரன் கூறுகையில், மலேசியாவில் இந்திய வம்சாவழியினர் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள். அவர்கள் எவ்வித பாகுபாட்டுடன் நடத்தப்படவில்லை. சில ஊடகங்கள்தான் இந்த சம்பவத்தை திரித்து தவறாக காட்டிவிட்டன. இந்திய வம்சாவழியினருக்கு பிரச்சினை ஏற்பட்டிருந்தால் இந்தியாவைச் சேர்ந்த நான் எப்படி அந்த நாட்டு அரசாங்கத்தில் பணியாற்ற முடியும்?
இந்தியாவில் இருந்து மலேசியா சென்றுள்ளவர்களில் சிலர் எதிர்பார்த்ததை விட அதிக நாட்கள் தங்கி இருப்பதால் தற்காலிகமாக விசா வழங்குவது நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது. இது ஒரு தற்காலிக நடவடிக்கை தான். விசா வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதற்கும் தற்போதைய சம்பவத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று கருணாகரன் கூறினார்.