தமிழ்நாட்டில் தமிழ் எங்குமே இல்லை. அரசு ஆணை கூட ஆங்கிலத்தில் தான் வருகிறது என்று டாக்டர் ராமதாஸ் குற்றம்சாற்றியுள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் நேற்று தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், பொதுவினியோக திட்டம் அரிசி பெருமளவு கடத்தப்படுகிறது. தூத்துக்குடியை மையமாக வைத்து அரிசி கடத்தல் நடக்கிறது. இந்த கடத்தல் கும்பல் யார்? யாருக்கு கடத்துகிறார்கள்? என்பது ரகசியமாக உள்ளது. இதனை எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.
டைட்டானியம் தொழிற்சாலைக்கு மக்கள் விரும்பி நிலத்தை கொடுத்தால், அதனை கணிசமான பணம் கொடுத்து குத்தகைக்கு எடுத்து, கனிமத்தை பிரித்து எடுத்து விட்டு நிலத்தை திருப்பி கொடுக்க வேண்டும், லாபத்தில் மக்களுக்கு பங்கு கொடுக்க வேண்டும். இதை நிறைவேற்றி தொழிற்சாலை தொடங்கப்பட்டால் பிரச்சினை இல்லை.
உரிமைக்காக போராடிய தமிழர்கள் மீது மலேசிய அரசு தாக்குதல் நடத்தியது கண்டனத்துக்கு உரியது. புதுடெல்லியில் உள்ள மலேசிய தூதரை உடனடியாக வெளியுறவுத்துறைக்கு வரவழைத்து இந்திய மக்களின் உணர்வையும், கண்டனத்தையும் வெளிப்படுத்த வேண்டும்.
லாட்டரி, கஞ்சா, கந்துவட்டி, கள்ளச்சாராயம், விலைவாசி உயர்வு, சிமெண்டு விலை உயர்வு, பண்பாட்டு சீரழிவுகள், உரம் தட்டுப்பாடு, மணல் கொள்ளை, சில்லறை வணிகம் சிறப்பு பொருளாதார மண்டலம் பற்றி சரியான கொள்கை தமிழக அரசில் இல்லை. தமிழ்நாட்டில் தமிழ் எங்குமே இல்லை. இதனை எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் நேருக்கு நேர் விவாதிக்க தயார். அரசு ஆணை இன்று கூட ஆங்கிலத்தில்தான் வருகிறது.
கேபிள் டி.வி பிரச்சினை தொடர்ந்து குழப்பத்தில் உள்ளது. கேபிள் டி.வியில் எம்.எஸ்.ஓ தனியாருக்கு விடப்படும் என்று டெண்டர் விடப்பட்டு உள்ளது. இதனால் ஏற்கனவே இருந்து வரும் கேபிள் டி.விக்கும், தற்போது உள்ள டி.வி.க்கும் என்ன வித்தியாசம். நாட்டில் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை.
மருத்துவ மாணவர்களின் போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில தலைவர் தா.பாண்டியன் தூண்டிவிடுகிறார். மருத்துவ மாணவர்களின் கிராமப்புற சேவையை எதிர்ப்பவர்கள் கிராமப்புற மக்களுக்கு எதிரானவர்கள் என்றால் தவறு இல்லை. 15 ஆயிரத்து 500 பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்புக்காக பதிவு செய்து உள்ளனர். இந்த போராட்டம் குறித்து மாணவர்களை அழைத்து பேச தயாராக உள்ளோம் என்று ராமதாஸ் கூறினார்.