உத்தரபிரதேசத்தில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் வழக்கறிஞர்கள் பலியானதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் நாளை வழக்கறிஞர்கள் ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்துகின்றனர்.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோ, பைசாபாத் உள்ளிட்ட மூன்று நகரங்களில் உள்ள நீதிமன்றங்கள் மீது தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வெடிக்க செய்தனர். இதில் 4 வழக்கறிஞர்கள் உள்பட பலர் பலியானார்கள். இதை கண்டித்து நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தம் செய்ய வேண்டும் என்று அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் அழைப்பு விடுத்தது.
இதன்படி நாளை சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவர் பால் கனகராஜ் தெரிவித்தார்.
இதே போல தமிழ்நாடு முழுவதும் நாளை வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்று தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர் சந்திரமோகன் கூறியுள்ளார். மேலும் வழக்கறிஞர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
சென்னை பார் கவுன்சில் தலைவர் டி.வி.ராமானுஜம் விடுத்துள்ள அறிக்கையில், சென்னை முழுவதும் நாளை வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணிப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.