அ.இ.அ.தி.மு.க.வினர் மீது தமிழக அரசு பொய் வழக்குப் போடுவதை கண்டித்து அ.இ.அ.தி.மு.க.வினர் கோவையில் நாளை உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவார்கள் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டம், பொங்கலூர் ஒன்றியத்தில் கழகத்தின் சார்பில் நடைபெற்ற அறப் போராட்டத்தில் பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டு ஆதரவு நல்கியதை பொறுத்துக்கொள்ள முடியாத தி.மு.க. அரசு, அ.இ.அ.தி.மு.க.வினர், பொறுப்பாளர்கள் உள்ளிட்ட 51 பேர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் பொய்வழக்குகளை பதிவு செய்து, அதில் 15 பேரை கைது செய்து சிறையில் அடைத்தது.
அதனைத்தொடர்ந்து மீண்டும் அ.இ.அ.தி.மு.க.வினர் மூன்று பேர் மீது பொய் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். அ.இ.அ.தி.மு.க.வினர் மீது தொடர்ந்து பொய்வழக்குகள் புனையப்பட்டு வருகிறது.
இதை கண்டித்து அ.இ.அ.தி.மு.க. கோவை மாநகர், கோவை புறநகர் வடக்கு, கோவை புறநகர் தெற்கு மாவட்டக் கழகங்களின் சார்பில் நாளை (30ஆம் தேதி) காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் அருகில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.