''மருத்துவர் ராமதாசுக்கு அன்றாடம் பொழுது விடிந்தால் யாரைப் பற்றியாவது குற்றச்சாற்று கூறாவிட்டால் தூக்கம் வராதுபோலும்'' என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகரத்தில் நடைபெற்ற ஒரு மணவிழாவில் பேசிய பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் பற்றி பேசியதாகவும், அப்போது தமிழகத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் ஏற்கனவே மத்திய அரசின் திட்டத்துக்கு ஒத்துக்கொண்டதாகவும், ஆனால், தற்போது தமிழகத்தை ஆளுகிறவர்களும், ஏற்கனவே ஆண்டவர்களும் இதனை எதிர்ப்பதற்காக ஒன்றாக கூட்டுச் சேர்ந்துள்ளார்கள் என்றும் பேசியிருக்கிறார். மருத்துவர் ராமதாசுக்கு அன்றாடம் பொழுது விடிந்தால் யாரைப் பற்றியாவது குற்றச்சாற்று கூறாவிட்டால் தூக்கம் வராதுபோலும்.
மத்திய அரசு சார்பில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்த முன்வந்து உண்ணாவிரதம் இருந்தபோது, அந்தப் பிரச்சினையில் ஏதாவது சுமூக முடிவு எடுக்க வேண்டும் என்ற அக்கறையோடு, அந்த மாணவர்களை முதலமைச்சர் கலைஞர் நேரில் சந்தித்து மத்திய அமைச்சருக்கும், பிரதமருக்கும் கடிதம் எழுதுவதாகவும், அவர்களை உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டு போராட்டத்தை நிறுத்துவதற்கு வழி வகுத்தாரே தவிர, அந்த மாணவர்களை தூண்டிவிடவில்லை என்பதை உலகமே நன்கு அறியும். மருத்துவக் கல்லூரி மாணவர்களும் இதை அறிவார்கள்.
மருத்துவர்கள் கிராமங்களில் பணியாற்றுவது குறித்து தமிழக அரசுக்கு வேறுபட்ட கருத்து கிடையாது. ஆனால், மருத்துவப் படிப்புக்கான காலத்தை ஆறரை ஆண்டுகளாக நீட்டிப்பதைப் பற்றி மாணவர்கள் எழுப்பிய கோரிக்கை குறித்துத் தான் மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதுவதாக முதலமைச்சர் தெரிவித்தார். மேலும் இந்த ஊர் சுகாதாரத்துறை அமைச்சர் ஏதோ கையெழுத்துப் போட்டுக்கொடுத்ததாகவும் டாக்டர் ராமதாஸ் தெரிவித்து இருக்கிறார். அப்படி நானோ, எனக்கு முன்பிருந்த கே.கே.எஸ்.எஸ்.ஆரோ எந்தவிதமான கையெழுத்தும் போட்டுக்கொடுக்கவில்லை.
ஆனால், இந்த திட்டத்தை எதிர்ப்பதற்காக தற்போது ஆளுகின்றவர்களும், ஏற்கனவே ஆண்டவர்களும் ஒன்றாகக் கூட்டுச்சேர்ந்திருப்பதாக டாக்டர் ராமதாஸ் சிதம்பரத்தில் பேசியிருப்பது என்பது வேண்டுமென்றே திட்டமிட்டுக்கூறுகிற கற்பனையேயாகும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.