மருத்துவ படிப்பை ஐந்தரை ஆண்டில் இருந்து ஆறரை ஆண்டாக உயர்த்துவது, கட்டாய கிராமப்புற மருத்துவ சேவை குறித்து மத்திய அரசால் நியமிக்கப்பட்ட சாம்பசிவராவ் குழுவினர் இன்று மாணவர்கள், மருத்துவர்கள், பொதுமக்களிடம் கருத்து கேட்டறிந்தனர்.
மருத்துவ மாணவர்களின் படிப்பு காலத்தை ஐந்தாண்டில் இருந்து ஆறாண்டாக உயர்த்தியதை கண்டித்தும், கட்டாய கிராமப்புற சேவையை கண்டித்தும் மருத்துவ மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக மாணவர், பெற்றோர், மருத்துவர்களிடம் கருத்து கேட்டறிய மருத்துவர் சாம்பசிவராவ் தலைமையில் மருத்துவர்கள் சாவ்லா, சி.ஆதித்தன் கார், சிவானந்தரி பிரதான் ஆகியோர் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்தது.
இந்த குழுவினர் இந்தியா முழுவதும் 20 நகரங்களில் கருத்து கேட்டு வருகிறது. தற்போது கருத்து கேட்க சென்னை வந்துள்ள இக்குழுவினர் சென்னை மருத்துவ கல்லூரிக்கு சென்றனர். இவர்கள் கருத்தரங்கு கூட்டத்திற்கு சென்று கருத்து கேட்டனர். ஆனால் கருத்து தெரிவிக்க மாணவர்கள் மறுத்து விட்டனர். பின்னர், மருத்துவ மாணவர்கள் தங்கள் கருத்துக்களை விண்ணப்பத்தாளில் எழுதி சாம்பசிவராவ் குழுவினரிடம் மனு கொடுத்தனர்.
கருத்து கேட்பதற்கு முன்பு சாம்பசிவராவ் செய்தியாளர்களிடம் கூறுகையில், மருத்துவ சேவை கிராமப்புற மக்களுக்கு சரியாக கிடைக்காததால் அங்கு மருத்துவர்கள் கட்டாய பணியாற்ற அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காகத் தான் ஓராண்டு கிராமப்புற சேவையை கொண்டு வருவதாக கூறி உள்ளனர். 4 மாதம் மாவட்ட மருத்துவமனையிலும், 4 மாதம் தாலுகா மருத்துவமனையிலும், 4 மாதம் ஆரம்ப சுகாதார மையங்களிலும் பணியாற்ற வேண்டும். இதற்கு மாதம் ரூ.8 ஆயிரம் உதவித் தொகையாக வழங்கப்படும்.
இத் திட்டம் குறித்து பொதுமக்கள், மருத்துவர்கள், மாணவர்கள் யார் வேண்டுமானாலும் தங்கள் கருத்துக்களை எழுதி தரலாம். இன்று சென்னையில் கருத்து கேட்டு விட்டு புதுச்சேரி, திருப்பதியில் கருத்து கேட்க உள்ளோம் என்று சாம்பசிவராவ் கூறினார்.
இதை தொடர்ந்து கூட்ட அரங்கில் இருந்த மருத்துவர்களும், பெற்றோர்களும் தங்களது கருத்துக்களை எழுதிக் கொடுத்தார்கள்.