''மலேசியா சிறையில் அடைக்கப்பட்ட தமிழர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்யவும், அவர்களது உரிமைகளை மீட்டெடுக்கவும் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “மலேசியாவின் செல்வ நிலையை உயர்த்திய தமிழர்கள், தங்களுக்கு கல்வி, பொருளாதாரம், அரசியல் நிலைகளில் சம நீதியும், சம வாய்ப்பும் கிடைக்க வேண்டும் என்று இங்கிலாந்து தூதரகம் முன்பாக பேரணி நடத்தி, மனு கொடுக்க சென்றவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக மலேசிய அரசின் காவல்துறை தாக்குதல் நடத்தி இருப்பது கடும் கண்டனத்திற்கு உரிய செயலாகும்.
வெள்ளையர் ஆட்சி காலத்தில் தென்னாப்பிரிக்கா, பர்மா, மொரீஷியஸ், நியூசீலாந்து, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் உடல் உழைப்பினைப் பெறுவதற்காகவே, தமிழர்கள் அங்கு கொண்டு சென்று கொத்தடிமைகளாக இறக்கப்பட்டனர். அவ்வாறு இறக்கப்பட்ட தமிழர்கள்தான் மலேசியாவில் உள்ள கரும்புத் தோட்டங்களிலும், தேயிலைத் தோட்டங்களிலும், ரப்பர் தோட்டங்களிலும், ஈயம், தகரம் வெட்டும் சுரங்கங்களிலும் கடுமையாக உழைத்து மலேசியாவை பொன் கொழிக்கும் நாடாக ஆக்கினார்கள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
அப்படிப்பட்ட மலேசிய தமிழர்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டு, அவர்கள் அங்கு மூன்றாம் தர குடிமக்களாக வாழ்கின்றனர் என்பதும் கவலை அளிக்கிறது. இங்கிருந்து கூலிகளாகச் சென்ற போது அவர்களின் வாழ்க்கை நிலை எப்படி இருந்ததோ அப்படியே தான் இப்போதும் இருக்கிறது என்றும், அவர்களுக்கு கல்வி மறுக்கப்படுகிறது என்றும், 150 ஆண்டுகளுக்கும் மேலான நூற்றுக்கணக்கான பாரம்பரிய வழிபாட்டுத் தலங்கள் இடித்து அழிக்கப்பட்டன என்றும், இதற்கான மாற்று இடம் வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுவது மிகுந்த வேதனைக்குரிய விஷயம் ஆகும்.
தங்களுடைய நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள இங்கிலாந்து தூதரகம் முன்பு பேரணி நடத்த முடிவு செய்த தமிழர்கள் மீது கடுமையாக தாக்கப்பட்டிருப்பதும், ரசாயன கலவை கலந்த நீரை அவர்கள் மீது பீய்ச்சி அடித்திருப்பதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. மோதலில் காயமடைந்த 200 பேருக்கு சிகிச்சை அளிக்கக் கூட மலேசிய காவல்துறையினர் அனுமதிக்காதது காமன்வெல்த் நாடுகளின் விதியின்படி மாபெரும் குற்றமாகக் கருதப்படும் இச்செயல் கடும் கண்டனத்திற்கு உரியதாகும்.
அங்குள்ள தமிழர்களின் உரிமைகளை மீட்டெடுத்து முதலாம் குடிமகன்களாக அவர்களை உயர்த்தவும், தாக்குதலுக்கு ஆளாகி சிறையில் அடைக்கப்பட்ட தமிழர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்யவும் மத்திய அரசு தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.