''இட ஒதுக்கீட்டை பா.ம.க.தான் கொண்டு வந்ததுள்ளது. ஆனால் இட ஒதுக்கீட்டை தாங்கள்தான் கொண்டு வந்தோம் என்று பேசுபவர்கள் பைத்தியக்காரர்கள்'' என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சிதம்பரத்தில் பா.ம.க. பிரமுகர் வரதராஜன்- விமலா தேவி திருமண விழாவில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். பின்னர் அவர் பேசுகையில், இட ஒதுக்கீட்டை யார் கொண்டு வந்தது என்று கேட்டால் மாடு மேய்க்கும் சிறுவனுக்கு கூட தெரியும் ராமதாஸ் தான் என்று. ஆனால் இடஒதுக்கீட்டை நாங்கள் தான் கொண்டு வந்தோம் என்று சிலர் சொல்லி வருகிறார்கள். அவ்வாறு சொல்பவர்களை பைத்தியக்காரர்கள் என்று விட்டுவிட வேண்டும்.
மருத்துவக் கல்லூரி மாணவர்களின் கிராமப்புறங்களில் தங்கி ஒரு வருடம் பணியாற்ற வேண்டும் என்பது தொடர்பாக கருத்து கேட்பதற்கு மத்திய நல்வாழ்வுத்துறை அமைச்சர் அன்புமணி தலைமையில் அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களின் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு மத்திய அரசின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்டார். ஆனால் தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தை அரசியல்வாதிகள் அனைவரும் தூண்டிவிடுகின்றனர்.
கிராம முன்னேற்றத்தை கொள்கையாக வைத்திருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவாக அறிக்கைகள் வெளியிட்டு வருகின்றன. யாராவது பா.ம.க.வை விமர்சனம் செய்வதாக இருந்தால் நேராக செய்யுங்கள். சுற்றி வளைத்து செய்யாதீர்கள். அப்படி செய்தால் அந்த விமர்சனத்திற்கு நாங்கள் பயப்பட மாட்டோம்.
இதற்கெல்லாம் என்ன காரணம் என்றால் 2011ல் பா.ம.க. ஆட்சி அமைக்கும் என்று கூறியதுதான். அதனால் தான் வயிற்றெரிச்சலோடு பேசுகிறார்கள். இனி அரசியல்வாதிகள் தங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் தனியார் மருத்துவமனைக்கு போகக் கூடாது. அரசு மருத்துவமனைகளில் தான் சிகிச்சை பெற வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறினார்.