''மலேசியாவில் வாழும் தமிழர்கள் நல்ல விதமாக நடத்தப்படவும், அவர்களின் துயரம் நீங்கவும் தாங்கள் (பிரதமர்) உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொண்டால் நான் நன்றியுள்ளவனாக இருப்பேன்'' என்று முதல்வர் கருணாநிதி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மலேசியத் தமிழர்கள் நடத்திவரும் உரிமை போராட்டத்தை அந்நாட்டு அரசு கடுமையாக ஒடுக்கி வருகிறது. உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ள இப்பிரச்சனை தொடர்பாக பிரதமருக்கு இன்று முதல்வர் கருணாநிதி அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பி யுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: “கடந்த ஞாயிற்றுக்கிழமை (25ம் தேதி) கோலாலம்பூரில் தமிழர்களை மலேசிய காவல் துறையினர் நடத்தியவிதம் எனக்கு மனவேதனை தந்துள்ளது. மலேசியாவில் இந்திய வம்சாவழியினர் ஓரங்கட்டப்படுவதை எதிர்த்து கோலாலம்பூரில் தமிழர்கள் பேரணிக்கு அன்றைய தினம் ஏற்பாடு செய்ததாக சொல்லப்படுகிறது.
மலேசியாவில் வாழும் இந்தியர்களில் தமிழர்கள் அதிகம் என்பது தங்களுக்கு தெரியும். பேரணியில் கலந்துகொண்ட வர்கள் மகாத்மா காந்தியின் படங்கள் ஒட்டிய பதாகைகளை ஏந்திச்சென்றனர். சம உரிமைக் கோரி இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால் பேரணியை கலைக்கவும், ஆர்ப்பாட்டத்தை ஒடுக்கவும் மலேசிய காவல்துறையினர் கண்ணீர் புகையை பிரயோகித்ததோடு, வேகமாக தண்ணீரை பீய்ச்சியடித்தனர். மேலும், 240க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவழியினரை கைது செய்துள்ளனர்.
கோலாலம்பூரில் நடந்த இந்த நிகழ்வுகள் தமிழக மக்களை வெகுவாக பாதித்துள்ளது. நீண்டகாலமாக மலேசியாவில் வாழும் தமிழர்கள் நடத்தப்படும் விதம் குறித்து இங்குள்ள தமிழர்கள் அடைந்துள்ள கவலையை தங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.
மலேசியாவில் வாழும் தமிழர்கள் நல்ல விதமாக நடத்தப்படவும், அவர்களின் துயரம் நீங்கவும் தாங்கள் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொண்டால் நான் நன்றியுள்ளவனாக இருப்பேன்” என்று கடிதத்தில் முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.