நெல்லுக்கு குவிண்டாலுக்கு ஆயிரம் ரூபாய் மத்திய அரசு வழங்க கோரி காவிரி டெல்டா விவசாயிகள் இன்று ரயில், சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
கோதுமைக்கு ஆயிரம் ரூபாய் விலையை மத்திய அரசு நிர்ணயித்தது போல் நெல்லுக்கும் குவிண்டாலுக்கு ஆயிரம் ரூபாய் விலை நிர்ணயம் செய்து மத்திய அரசு அறிவிக்க கோரி தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். இதைத்தொடர்ந்து சாலை, ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர்.
அதன்படி நேற்று நள்ளிரவு முதல் விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 107 இடங்களில் இந்த மறியல் போராட்டம் நடந்து வருகிறது. திருவாரூர் புறவழிச்சாலையில் நாகை, திருவாரூர் மாவட்ட விவசாய சங்க தலைவர் பக்கிரிசாமி தலைமையில் நள்ளிரவில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை மறியல் செய்தனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையத்தில் இன்று அதிகாலை நெல் உற்பத்தியாளர்கள் மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன், திருத்துறைப்பூண்டி விவசாய சங்க செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவாரூர்
இதேபோல் திருவாரூர் மாவட்டம் நல்லிகுடி, இடையூர் சங்கேந்தி, முத்துப்பேட்டை, திருப்பத்தூர், விளக்குடி, ஆலத்தம்பாடி, கச்சனம், பாமணி உள்பட பல இடங்களில் விவசாயிகள் சாலை மறியல் செய்தனர். இதனால் நாகை, திருவாரூர், பட்டுக்கோட்டை வேதாரண்யம், மன்னார்குடி, வழி தடங்களில் பேருந்துகள் நிறுத்தப்பட்டன. விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து திருத்துறைப்பூண்டியில் இன்று கடைகள் மூடப்பட்டுள்ளது.
திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் உலகநாதன் தலைமையில் இன்று காலை திருத்துறைப்பூண்டியில் இருந்து புறப்பட்ட காரைக்குடி ரயிலை ரயில் நிலையம் அருகே மறித்தனர். இதில் சட்டமன்ற உறுப்பினர் உலகநாதன் உள்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். நாகை தலைமை தபால் நிலையம் முன்பு சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து தலைமையில் மறியல் செய்த ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.
திருவாரூர் மாவட்டம் சிங்களாஞ்சேரி ரயில்வே கேட் அருகில் விவசாய சங்க பொருப்பாளர் சிங்காரவேலு தலைமையில் விவசாயிகள் ரயில் மறியல் செய்தனர். மன்னார்குடி கீழபாலத்தில் சட்டமன்ற உறுப்பினர் சிவபுண்ணியம் தலைமையில் சாலை மறியல் செய்த 150 பேர் செய்து செய்யப்பட்டனர். திருவாரூர் ரயில் நிலையத்தில் இருந்து தஞ்சைக்கு புறப்பட தயாராக இருந்த ரயிலை மறித்த விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் சத்யநாராயணன், மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் பக்கிரிசாமி, சிவனேசன் உள்பட 30பேர் கைது செய்யப்பட்டனர்.
நாகை
நாகை மாட்டத்தில் புத்தூர் அண்ணா சிலை அருகே மாவட்ட செயலாளர் மாசிலாமணி தலைமையிலும் புது பேருந்து நிலையத்தில் மாவட்ட நிதிகுழு உறுப்பினர் பக்கிரிசாமி தலைமையிலும், திருமருகலில் மாவட்ட விவசாய சங்க தலைவர் சிங்கராயர் தலைமையிலும், ஏனாங்குடியில் ஒன்றிய விவசாய சங்க தலைவர் பொன்னுசாமி தலைமையிலும், விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் விவசாய சங்க வட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் ரயில் மறியல் செய்த விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் அருகே விவசாய மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் விவசாயிகள் மறியல் செய்தனர். மன்னார்குடி-திருவாரூர் சாலையில் உள்ள தவளக்கார கிராமத்தில் சாலை மறியல் நடந்தது. அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள் ஸ்டவ் அடுப்பில் டீ போட்டு குடித்தனர்.
தஞ்சாவூர்
தஞ்சையில் இருந்து திருவாரூர் சென்ற ரயிலை நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் விவசாய சங்க ஒன்றிய செயலாளர் கலியபெருமாள் தலைமையில் மறித்தனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். ரயில், சாலை மறியலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் அருகில் உள்ள மண்டபங்களில் தங்க வைத்தனர். விவசாயிகள் ஆங்காங்கே தொடர்ந்து மறியல் செய்து வருகின்றனர். விவசாயிகள் சாலை மறியல் செய்து வருவதால் திருவாரூர் மாவட்டத்தில் அடியோடு போக்குவரத்து பாதிப்பு அடைந்துள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை பழைய பேருந்து நிலையம், திருவையாறு பேருந்து நிலையம், பட்டுக்கோட்டை, மதுக்கூர். கறம்பயம், திருப்பனந்தாள், பேராவூரணி, பாபநாசம், சேதுபாவா சத்திரம் உள்பட 33 இடங்களில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மயிலாடுதுறையில் இருந்து திருச்சி வந்த ரயிலை தஞ்சை ரெயில் நிலையத்தில் வைத்து விவசாய சங்க மாவட்ட செயலாளர்கள் நீலமேகம், பன்னீர்செல்வம் தலைமையில் மறித்தனர். அவர்கள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்து அருகில் உள்ள மண்டபங்களில் வைத்தனர்.