''கிராமப்புறங்களில் மருத்துவர்கள் பற்றாக்குறையை போக்கு வேண்டும். அதே நேரத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர்களின் பிரச்சனைகளும் தீர்க்கப்பட வேண்டும்'' என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னையில் இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், விடுதலைப்புலிகள் இயக்கம் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட இயக்கமாகும். அந்த இயக்கத்திற்கு ஆதரவாக செயல்படுபவர்களைதான் மத்திய அமைச்சர் இளங்கோவன் கண்டித்திருக்கிறார். இது தவறில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரின் உருவ பொம்மையை எரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புகிறேன்.
தமிழக முதலமைச்சர் மருத்துவக் கல்லூரி மாணவர்களை அழைத்து பேசும்போது, அவர்களின் பிரச்சனையை பிரதமரிடமும், சம்பந்தப்பட்ட அமைச்சரிடமும் பேசுகிறேன் என்று கூறியிருக்கிறார். கிராமப்புறத்திற்கு சுகாதார வசதி தேவை. அங்கு மருத்துவர்கள் பற்றாக்குறையை போக்க வேண்டும். அதே நேரத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர்களின் பிரச்சனைகளும் தீர்க்கப்பட வேண்டும்.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி உயிரோட்டமுள்ள கட்சியாக செயல்படுகிறது. அதனால் தான் பல கட்சிகளும் எங்களுடன் கூட்டணி வைத்துக் கொள்ள விரும்புகிறது. காங்கிரஸ் கட்சியில் நிலவும் கோஷ்டி பூசலை தீர்க்க மேலிடம் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோஷ்டி பூசலை அனுமதிக்க மாட்டோம் என்று மேலிடத் தலைவர் அருண்குமார் அறிவித்துள்ளார். அவர் நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிந்ததும் தமிழகத்திற்கு வருகிறார். அவருடன் நானும் மற்ற தலைவர்களும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை சந்தித்து கருத்துக்களை கேட்க இருக்கிறோம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.