சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு அறிவித்தது தேர்தல் வாக்குறுதிக்காக அல்ல, அது என் ரத்தத்தில் ஊறியது என்று தமிழக முதலமைமைச்சர் கருணாநிதி கூறினார்.
சிறுபான்மையினருக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கிய முதலமைச்சர் கருணாநிதிக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் நன்றி அறிவிப்பு மாநாடு நேற்று சென்னையில் நடந்தது.
மாநாட்டில் கலந்து கொண்டு ஏற்புரை நிகழ்த்திய முதலமைச்சர் கருணாநிதி, நாம் உறவு கொண்ட இரு சமுதாயத்தினர், மன்னிக்க வேண்டும் இரு சமுதாயம் அல்ல, ஒரே சமுதாயம், எல்லோரும் சகோதரர்கள் தான். சிறுபான்மை சமுதாயம் முன்னேற வேண்டும், உரிமைகளை பெற வேண்டும் என்பதற்காக நீண்டகாலமாக குரல் கொடுத்து, கோரிக்கை வைத்து, போராடி, இந்த உண்மைகளை உணர்ந்து, உணர்வுகளை மதித்து, நாங்கள் செயல்பட்டு தேர்தல் நேரத்திலே அறிவித்த வாக்குறுதியை நிறைவேற்றியிருக்கிறோம் என்றால், மன்னிக்க வேண்டும் இது எங்கள் ரத்தத்தோடு ஊறிய சமாச்சாரம்.
1920-25 ஆண்டுகளில் இந்த மாநிலத்தை ஆண்ட கட்சி, நீதிக்கட்சியின் ஆட்சி நடைபெற்ற போதே, இட ஒதுக்கீடு கொள்கைக்கு அப்போது வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்ற பெயர் சூட்டப்பட்டு அதன்படி சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டவர்கள், பச்சையாக சொல்ல வேண்டுமேயானால் மேலோர், உயர்ந்தோர் அல்லாத சமுதாயத்தவர்களுக்காக நீதி வழங்கிய ஆட்சி தான் நீதிக் கட்சி ஆட்சி.
இதை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் எனக்கு எப்படி ஏற்பட்டது என்றால் அது ரத்தத்தில் ஊறியது. இன்று நேற்றல்ல.
த.மு.மு.க. 1995-ல் தோன்றிய போது 5 ஆம்புலன்ஸ் வாகனங்கள் வாங்கப்பட்டு நலிந்தவர்களுக்கு உதவியதாக கூறினார்கள். இப்போது 31 ஆம்புலன்ஸ் உள்ளதாகவும் தெரிவித்தனர். இந்த இயக்கத்தின் பணி, ஆக்க வேலை மக்களுக்கு தொண்டாற்றுவது, சமுதாயத்தில் நலிந்த பிரிவினருக்கு நன்மை செய்வது, கருணை இல்லம், அன்பு இல்லம் போல இந்த இயக்கம் ஏற்றுக் கொண்டு மிக குறுகிய காலத்தில் 5 ஆம்புலன்ஸ் 31 ஆக பெருகியிருப்பது பாராட்டத்தக்கது. என் பொறுப்பில், அரசு பொறுப்பில் அல்ல, என் சொந்த பொறுப்பில் இன்னும் 2 ஆம்புலன்ஸ் வாங்க, அதற்குரிய நிதி எவ்வளவு என்று கூறினால் என் சொந்த பொறுப்பிலே இந்த தொகையை வழங்கி - இந்த நாள் நம் நினைவில் நிற்க வேண்டிய நாள். நலிந்தோருக்காக நாம் நம்மை அர்ப்பணித்துக் கொள்ள - நமக்கு வழிகாட்டியாக உள்ளவர்களின் பெயரால் எடுத்துக் கொண்ட சபதத்தை நிறைவேற்றிய நாள் என்ற வகையிலே இது அமையும்.
நான் சிறப்பு விருந்தினர் என்று கூறினார்கள். நான் விருந்தினர் அல்ல, விருந்தினர்களை வரவேற்கும் உங்களில் ஒருவன். என்னைப் பெருமைப்படுத்துவதாக எண்ணி என்னை வேறுபடுத்திவிடாதீர்கள். நீங்கள் வேறு, நான் வேறல்ல.
இன்று நேற்றல்ல, இளம் பிராயத்திலேயே ஒரு கையில் முஸ்லிம் லீக் பிறைக்கொடியும், மற்றொரு கையில் திராவிட இயக்க கொடியும் பிடித்து வளர்ந்தவன். புதுச்சேரியில் நான் அடிபட்டு, உதைபட்டு உயிர் போய்விட்டது என்று அந்த கும்பல் விட்டுச் சென்ற போது நான் அங்கிருந்து தப்பிச் சென்று, பெரியாரிடம் அழைத்துச் செல்லப்பட்ட போது, மீண்டும் வேறு யாரும் என்னை அடையாளம் கண்டு தாக்கிவிடக் கூடாது என்று நான் கட்டிச் சென்ற ஆடை லுங்கி தான்.
நாம் ஆடையில், எண்ணத்தில், உணர்வுகளில் ஒன்றுபட்டு நிற்கின்றோம். அப்படிப்பட்ட சமுதாய ஒற்றுமையை பேணிக்காக்கின்ற தலைவர்களால் வளர்க்கப்பட்டிருக்கிறோம். பெரியார், அண்ணா, காயிதேமில்லத் இவர்கள் எல்லாம் நம்மை வழிநடத்தி சென்றிருக்கிறார்கள். இந்த வழியிலே சகோதரர்களாக செல்வோம் என்று குறிப்பிட்டு - நான் ஒரு கூட்டத்தில் சொன்னதைப் போல, ``இந்து முஸ்லிம் சீக் ஈ சாயி - ஆபஸ் மே ஹை பாயி பாயி'' என்ற அந்த தத்துவத்தை இந்தியாவிலே கடைப்பிடிப்போம், அது தான் இந்த விழாவின் குறிக்கோளாக இருக்க வேண்டும் என்று கருணாநிதி கூறினார்.