கேரளா விரைவு ரயிலுக்கு நேற்று முன்தினம் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டதையடுத்து ரயில்வே காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் ரயில்வே நிலைய அதிகாரிக்கு நேற்று முன்தினம் ஒரு கடிதம் வந்தது. அதில், நான் கோவையில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்தேன். அப்போது என் அருகில் அமர்ந்திருந்த மூன்று பேர் வரும் 23 ம் தேதி (இன்று) கேரளா விரைவு ரயிலில் குண்டு வெடிக்கும் என்று ஹிந்தியில் பேசிக்கொண்டிருந்தனர்.
எனக்கு ஹிந்தி தெரியும் என்பதால் புரிந்து கொண்டேன். இத்தகவலை பத்திரிக்கை, மீடியா மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் தெரியப்படுத்தி தடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடிதத்தில் பெயர், ஊர் உள்ளிட்ட விவரம் எதுவும் இல்லை. நிலைய அதிகாரி ரயில்வே காவல்நிலையத்தில் புகார் செய்தார். பிறகு, வெடிகுண்டு தடுப்பு பிரிவு காவலர் ரயில்நிலையத்துக்கு விரைந்தனர். நுழைவு வாயிலில் எக்ஸ்ரே ஸ்கேனிங் மெஷின் மற்றும் டோர் பிரேம் பொருத்தப்பட்டு, அவ்வழியாக மட்டுமே பயணிகள் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
கடிதத்தில், இன்று குண்டு வெடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் காவல்துறையினர் ரயில்நிலையத்தில் மோப்ப நாய் உதவியுடன் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
ஒவ்வொரு பயணியும் முழு பரிசோதனைக்கு பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். இன்று கேரளாவில் இருந்து சேலம் வழியாக செல்லும் அனைத்து ரயில்களிலும் காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலத்தில் தனி ரயில்வே கோட்டம் அமைக்கப்பட்ட சூழலில் மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.