மருத்துவ படிப்பை ஐந்தரை ஆண்டுகளிலிருந்து ஆறரை ஆண்டுகளாக உயர்த்துவதை எதிர்த்து போராட்டம் நடத்தி வந்த மருத்துவக் கல்லூரி மாணவர்களிடம் முதலமைச்சர் கருணாநிதி நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டத்தை விலக்கிக் கொண்டதாக மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அறிவித்தார்.
மருத்துவ பட்டப்படிப்பை ஐந்தரை ஆண்டுகளிலிருந்து ஆறரை ஆண்டுகளாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கட்டாய கிராமப்புற சேவை என்ற இந்த அறிவிப்பை ஒரு வாரத்திற்கு முன்பு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் அறிவித்தார். மருத்துவ படிப்பு குறித்த சாம்பசிவ ராவ் குழுவின் பரிந்துரைக்கு ஏற்பவே இந்த மாற்றம் செய்யப்படுவதாக அவர் கூறினார்.
அமைச்சரின் அறிவிப்பை அடுத்து தமிழகத்தில் கடந்த திங்கட்கிழமை முதல் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் அரசு மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றை சேர்ந்த மாணவர்கள் உண்ணாவிரதம் உள்பட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இதற்கிடையே மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தமிழக அரசுடன் பேச்சு நடத்த வர வேண்டும் என்று மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்தார். இதையடுத்து, மருத்துவக் கல்லூரி மாணவர்களின் பிரதிநிதிகள் கோட்டையில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இந்த பேச்சுவார்த்தை பிறகு மாணவர் பிரதிநிதிகள் முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்தனர். மாணவர்கள், பெற்றோர்களின் உணர்வை மதிப்பதாக கூறி இது பற்றி பிரதமருக்கும், மத்திய அமைச்சர் அன்புமணிக்கும் தாம் கடிதம் எழுத இருப்பதாக முதலமைச்சர் அளித்த உறுதிமொழியை ஏற்று போராட்டத்தை விலக்கிக் கொள்வதாக மாணவர்கள் தெரிவித்ததாக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பேச்சுவார்த்தையின் முடிவில் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் டி.ஜானகிராமன் செய்தியாளர்களிடம் கூறுகையில், முதலமைச்சர் உடனடியாக பிரதமருக்கும், மத்திய அமைச்சர் அன்புமணிக்கும் கடிதம் எழுதி இத்திட்டத்தை கைவிடுமாறு வலியுறுத்துவேன் என்று உறுதி அளித்ததுடன், உடனடியாக செயலரை அழைத்து கடிதம் தயார் செய்ய எங்கள் முன்னிலையிலேயே உத்தரவிட்டார். இதை ஏற்று போராட்டத்தை கைவிட வேண்டுமென்று அவர் கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து எங்கள் போராட்டத்தை நாங்கள் கைவிட்டு விட்டோம். ஆறரை ஆண்டு கால நீட்டிப்பால் எங்களது நிரந்தர பணி வாய்ப்பு பாதிக்கப்படும். இத் திட்டத்திற்கு கிராமப்புற சேவை என்ற கவர்ச்சிகரமாக பெயர் வைத்திருக்கிறார்களே தவிர, அது எங்கள் உழைப்பை சுரண்டும் திட்டமாகும் என்று தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் டி.ஜானகிராமன் கூறினார்.