தமிழகத்தில் கூலிப்படை, ரவுடி கும்பலை ஒடுக்க காவல்களுக்கு அதிரடி கட்டளைகளை முதலமைச்சர் கருணாநிதி பிறப்பித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் கருணாநிதி தலைமையில், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலவரம், காவல் துறை பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், காவல் அதிகாரிகள் பங்கேற்றனர்.
அவர்களிடையே முதலமைச்சர் கருணாநிதி பேசுகையில், தமிழகத்தில் நடமாடும் கூலிப்படையினர், ரவுடிக் கும்பல்கள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட வேண்டும். அவர்களின் செயல்பாடுகளைத் தடுத்திட உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சிவில் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் காவலர்கள் தலையிடக் கூடாது.
சமூக விரோதிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தக் கூடிய வகையில் இரவு ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். காவல் நிலையங்களில் விசாரணைக் கைதிகளின் மரணம் எந்தச் சூழ்நிலையிலும் நிகழக் கூடாது. அந்த வகையில் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்.
சிறைச்சாலைகளில் கைதிகள் சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தடுக்க வேண்டும். கைதிகள் சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபடத் துணை போகும் பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.