தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நாளுக்கு நாள் சரிவடைந்து வருவதாகவும், அரசு நிர்வாகம் செயலிழந்து விட்டதாகவும் அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றது முதல் தமிழ் நாட்டில் வன்முறை கலாச்சாரம் கட்டவிழத்து விடப்பட்டு சட்டம்- ஒழுங்கு நாளுக்கு நாள் சரிந்து கொண்டே இருக்கிறது. அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்த தமிழ்நாட்டை பயங்கரவாத, தீவிரவாதிகளின் புகலிடமாக தி.மு.க. மாற்றி வருகிறது.
கருணாநிதியின் மகன்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் சிவகங்கை நகராட்சித் தலைவர் ரிமோட் வெடிகுண்டால் கொலை செய்யப்பட்டது, கருணாநிதி குடும்பத்திற்குள் ஏற்பட்ட பணப்பட்டுவாடா பிரச்சனையில் தினகரன் அலுவலகம் பட்டப்பகலில் தீக்கிரையாக்கப்பட்டு மூன்று பேர் கொல்லப்பட்டது, கூட்டணிக் கட்சியின் தலைவரே தாக்கப்பட்டது, தற்போது திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் கொல்லப்பட்டது உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் கருணாநிதி ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்து கிடப்பதற்குச் சான்றாக விளங்குகின்றன.
திருவாரூர் மாவட்டத்தில் பேருந்துகளை இயக்கவிடாமல், கடைகளை முற்றிலுமாக அடைத்தும் தி.மு.க.வினர் அராஜக செயல்களில் ஈடுபட்டும் வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டிருக்கிறது. இது தி.மு.க. அரசின் ஓட்டு மொத்த நிர்வாகம் செயலிழந்து இருப்பதையே காட்டுகிறது. இது ஒரு வெட்கக்கேடான வேதனை அளிக்கக்கூடிய செயலாகும்.
திருவாரூர் மாவட்டத்தில் இயல்பு நிலை மீண்டும் திரும்புவதற்கு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அ.தி.மு.க.வினர் மீது பொய் வழக்குகள் பதிவு செய்வதையும் விட்டு விட்டு அந்த மாவட்டத்தில் இயல்பு நிலை மீண்டும் திரும்புவதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.