''பாலாற்றுப் பிரச்சனையில் மெத்தனம் காட்டும் தமிழக பொதுப் பணித் துறை அமைச்சர் துரைமுருகன் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்’’ என்று தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கோரியுள்ளார்.
இன்று வேலூர் வந்த சி.பி.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாலாற்றின் குறுக்கே அணை கட்ட ஆந்திர அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் பற்றி தி.மு.க. அரசு கவலைப்படவில்லை. இந்த பிரச்சனையில் அரசு மெத்தனமாக உள்ளது. மத்திய அரசும் அதைத் தடுக்க ஆர்வம் காட்டவில்லை.
தமிழகத்தில் ஆட்சி நடத்தும் தி.மு.க., மத்திய அரசிலும் இடம் பெற்றுள்ளது. பதவியில் இருக்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்களே தவிர, மக்களைப் பற்றி துளியும் கவலைப்படவில்லை.
பாலாற்றுத் தண்ணீரை குடித்து வளர்ந்த பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன், நன்றிக் கடனாக இப்பிரச்சனையில் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார்.