ஏழைகளுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டி, கியாஸ் அடுப்புகளை முதலமைச்சர் கருணாநிதி நவம்பர் 27ஆம் தேதி சென்னையில் வழங்குகிறார்.
இது குறித்து அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், தி.மு.க. தேர்தல் அறிக்கையிலும், அதனைத் தொடர்ந்து, 2006-2007 ம் ஆண்டு பட்ஜெட்டிலும் அறிவித்தபடி, முதலமைச்சர் கருணாநிதி 15.9.2006 அன்று அண்ணா பிறந்த நாளில் காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகில் கரசங்கால் கிராமத்தில் முதற்கட்டமாக 30 ஆயிரம் இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டி வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். அதன் மறுநாளில் தமிழகம் முழுவதிலும் அமைச்சர்கள் அனைத்து சமத்துவபுர குடியிருப்புகளுக்கும், நீலகிரி மாவட்ட மக்களுக்கும், சென்னையில் உள்ள 2 குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகளுக்கும் இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகளை வழங்கினார்கள்.
அதனைத் தொடர்ந்து, 25 லட்சம் ஏழை, எளிய குடும்பங்களுக்கு வண்ணத் தொலைக்காட்சி பெட்டி வழங்கும் 2-ம் கட்டப் பணிகளை 15.2.2007 அன்று திருவள்ளூர் மாவட்டம் பம்மதுகுளம் கிராமத்தில் முதலமைச்சர் கருணாநிதி தொடங்கி வைத்தார். அதே நாளில் தமிழகம் முழுவதும் வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகளை அமைச்சர்கள் வழங்கினார்கள்.
தமிழகம் முழுவதும் தொடர்ந்து வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகள் வழங்கப்பட்டு வருகின்றன. 18.11.2007 வரை 23 லட்சத்து 79 ஆயிரத்து 721 வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகள் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் அளிக்கப்பட்டு, 21 லட்சத்து 32 ஆயிரத்து 956 வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகள் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. 3-வது கட்டமாக ரூ.750 கோடி செலவில் மேலும் 34 லட்சத்து 25 ஆயிரம் வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகள் கொள்முதல் செய்வதற்காக சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அவற்றை வரும் டிசம்பர் மாதம் முதல் மக்களுக்கு இலவசமாக வழங்குவதற்கான ஏற்பாடுகளும் நடக்கின்றன.
அதேபோல ஏழை, எளிய பெண்களுக்கு கியாஸ் இணைப்புடன் கூடிய இலவச கியாஸ் அடுப்புகள் வழங்கும் திட்டம் 14.1.2007 அன்று முதலமைச்சர் கருணாநிதியால் சென்னையில் ஆயிரம் விளக்கு பகுதியில் தொடங்கி வைக்கப்பட்டது. அதே நாளில் தமிழகம் முழுவதும் மாவட்ட அளவில் இலவச கியாஸ் அடுப்புகளை அமைச்சர்கள் வழங்கினார்கள். கடந்த 16ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் 3 லட்சத்து ஆயிரத்து 560 கியாஸ் இணைப்புடன் கூடிய இலவச கியாஸ் அடுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து 8 லட்சம் கியாஸ் அடுப்புகள் வழங்கப்படுகின்றன. இத்திட்டங்களின் தொடர்ச்சியாக, முதலமைச்சர் கருணாநிதி, சென்னையில் 27ஆம் தேதியன்று இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகளையும், கியாஸ் இணைப்புடன் கூடிய இலவச கியாஸ் அடுப்புகளையும் ஏழை, எளிய பெண்களுக்கு வழங்குகிறார்.
அதே நாளில் தமிழகம் முழுவதும் மாவட்டங்களில் அமைச்சர் பெருமக்கள் கலந்து கொண்டு இவற்றை மக்களுக்கு வழங்குவார்கள். திருவொற்றியூரில் அமைச்சர் க.அன்பழகன், தூத்துக்குடி மாவட்டம் வசவப்பபுரத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் வழங்குவார்கள் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.