''அரசியலில் ரவுடிகளும், குண்டர்களும் கட்சிப் பதவிகளை பெற்றுவிடுவதால் தான் பழிக்குப்பழி நிகழ்ச்சிகள் தொடர்கிறது என்பதை அனைத்து அரசியல் கட்சிகளும் உணர்ந்து கொண்டு, வன்முறையில் நம்பிக்கை உள்ளோரை கட்சி பதவிகளில் அமர்த்துவதை தவிர்க்க வேண்டும்'' என்று அகில இந்திய சமுத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து சரத்குமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் பூண்டி கலைச்செல்வன், செங்கல்பட்டு நகர அ.தி.மு.க. செயலாளர் குமார், ஆறுமுகம் ஆகிய இருவரும் வெட்டி படுகொலை செய்யப்பட்டது என தமிழ்நாட்டு அரசியல் சமீப காலமாக குருதி வழியும் வன்முறை அத்தியாயங்களாக மாறி வருவது கண்டு பொதுமக்கள் கலக்கமும், கவலையும் அடைந்திருக்கிறார்கள்.
பிரதிபலன் பாராத மக்கள் தொண்டு என்னும் தூய்மையான அரசியலில் ரவுடிகளும், குண்டர்களும் கட்சிப் பதவிகளை பெற்றுவிடுவதால் தான் பழிக்குப்பழி நிகழ்ச்சிகள் தொடர்கிறது என்பதை அனைத்து அரசியல் கட்சிகளும் உணர்ந்து கொண்டு, வன்முறையில் நம்பிக்கை உள்ளோரை கட்சி பதவிகளில் அமர்த்துவதை தவிர்க்க வேண்டும்.
மேலும் பெருகி வரும் ஆயுத வெடிகுண்டு கலாசாரத்தை அடக்கி, ஒடுக்கிட காவல் துறைக்கு முழு சுதந்திரம் தரப்பட வேண்டும். வேலை வாய்ப்பின்றி விரக்தியற்றுக் கிடக்கும் இளைஞர் சக்தியை ஆக்கப்பூர்வ வழிகளில் செலுத்திட தமிழக அரசு இளைஞர் சுயஉதவிக்குழுக்களை உடனடியாக அமைத்திட வேண்டும்.
இதன்மூலம் இளைஞர்கள் வன்முறை வழிகளில் செல்லாமல் தடுக்க முடியும் என்பதையும் தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழக அரசு விரைந்து பாரபட்சமற்ற நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், ஜனநாயகத்தின் மீதே மக்கள் நம்பிக்கை இழக்கும் அபாயம் வந்துவிடும் என்று சுட்டிக்காட்ட விரும்புகிறேன் என்று சரத்குமார் கூறியுள்ளார்.