மாநகராட்சி சமுதாய கல்லூரியில் படித்த 90 மாணவ- மாணவிகளுக்கு தனியார் நிறுவனங்களில் பணி புரிவதற்கான ஆணைகளை உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை மாநகராட்சி மேயராக இருந்த போது 1999ஆம் ஆண்டு ஏழு கிணறு, திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், ஆழ்வார்பேட்டை ஆகிய நான்கு இடங்களில் சமுதாயக் கல்லூரிகளை தொடங்கினார். இக்கல்லூரிகள் வேலை வாய்ப்பினை, செயல்திறனை, தொழில் பயிற்சியினை அடிப்படையாக கொண்டு தரமான கல்வியை வழங்கி வருகின்றன.
சமூக, பொருளாதார, கல்வி நிலையங்களில் மிகவும் பின் தங்கியுள்ளவர்களுக்கு இக்கல்லூரியில் முன்னுரிமை வழங்கி சேர்க்கப்படுகின் றனர். சென்னை மாநகராட்சி சமுதாய கல்லூரியில் கணினி நுட்பவியல், அச்சுத் தொழில் நுட்பவியல், இரண்டு, நான்கு சக்கர வாகன நுட்பவியல், பெண் செவிலியர் உதவியாளர், கணினி பழுது பார்ப்பு, பராமரிப்பு, அலுவலக மேலாண்மை, உணவக மேலாண்மை, ரொட்டி தயாரிப்பு ஆகிய எட்டு வகையான தொழிற்கல்விகள் கற்பிக்கப்பட்டு மாணவர்களுக்கு நற்சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.
தற்போதைய நடைமுறை வாழ்விற்கு ஏற்ற 3 மாத குறுகிய கால தொழிற் பாடப்பிரிவுகள் சென்னை மாநகராட்சியின் சமுதாய கல்லூரி, அருணாசலம் தெருவில் இக் கல்வி ஆண்டு முதல் தொடங்கப்பட்டுள்ளது. இத்துறையில் அனுபவம் பெற்ற மருத்துவர் ரெட்டி பவுண்டேஷன் என்ற தரமான நிறுவனமும், சென்னை மாநகராட்சியும் சேர்ந்து பயிற்சிகள் வழங்கியுள்ளன.
அதன் அடிப்படையில் ஆகஸ்டு 2007ல் முதல் கட்டமாக 105 மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட்டு, அதில் பயிற்சியை முழுமையாக முடித்த 90 மாணவ, மாணவிகளுக்கு முன்னோடி நிறுவனங்களான மெக்டோனால்ட்ஸ், இம்பெடஸ், அர்விந்த் பிராண்ட்ஸ், ஏ.பி.என். ஆம்ரோ, நோக்கியா, ஸ்மோக் கிங் ஜோஸ், ஸ்பென்சர்ஸ் டெய்லி, வோடோபோன், டிஸ் டி.வி., காபி டேஹோட்டல், ஸ்டார் சிட்டி ஹோட்டல் போன்ற நிறுவனங்களுக்கு மாநகராட்சி முயற்சியுடன் பணிபுரிய தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.
இவர்களுக்கு சராசரியாக ரூ.4000 முதல் ரூ.6000 வரை மாத வருமானம் கிடைத்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது. இப் பணிக்கான ஆணைகளை உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.