''முல்லைப் பெரியாறு அணை குறுக்கே கேரள அரசு புதிய அணை கட்ட இருப்பதை மத்திய அரசு தடுக்க வேண்டும்'' என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் துரைமாணிக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முல்லைப் பெரியாறு அணை பலவீனமாகி விட்டதாகக் கூறி அணையின் நீர்தேக்கும் அளவை 136 அடியாக கேரள அரசு குறைந்தது. அதை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியதைத் தொடர்ந்து, மத்திய அரசின் நிபுணர் குழு ஆய்வு செய்து அணை பலமாக இருப்பதாகவும், பூகம்பம் போன்றவற்றால் அணைக்குப் பாதிப்பு ஏற்படாது என்றும் தாக்கல் செய்த அறிக்கை அடிப்படையில் 142 அடிவரைத் தண்ணீரைத் தேக்க உச்ச நீதிமன்றம் கேரளாவிற்கு உத்தரவிட்டது.
அதை அமல்படுத்த மறுத்து வருவதுடன், தற்போதுள்ள அணைக்குக் கீழே புதிய அணையைக் கட்டி தமிழகத்திற்கு ஒரு சொட்டுத் தண்ணீர் கூட கிடைக்க விடாமல் செய்வதற்கான பணிகளை கேரள அரசு வேகப்படுத்தி வருகிறது. முல்லைப் பெரியாறு தண்ணீர் கிடைக்கவில்லையென்றால் மதுரை, தேனி, சிவகங்கை, திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் பாலைவனமாவதைத் தடுக்க முடியாது.
கேரளா ஏற்படுத்தி வரும் தடைகளால் சம்பந்தப்பட்ட மாவட்ட மக்களுக்கு ஆண்டிற்கு சுமார் ரூ.500 கோடி அளவிற்கு இழப்பு ஏற்படுகிறது. இந்த அபாயத்தை தடுக்க மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும். 2006ல் மத்திய நீர்ப்பாசன அமைச்சர் தலைமையில் நடைபெற்ற இரு மாநில முதல்வர்கள் கலந்து கொண்ட முல்லைப் பெரியாறு குறித்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் ஏற்படாத நிலையில் மீண்டும் அதற்கான முயற்சியை மத்திய அரசு மேற்கொள்ள வில்லை.
உடனடியாக மத்திய அரசு தலையிட்டு புதிய அணை கட்டுவதைத் தடுக்க வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி 142 அடி நீரைத் தேக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். தாமதமில்லாமல் தமிழ்நாடு அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் துரைமாணிக்கம் கூறியுள்ளார்.