''நவம்பர் 23ஆம் தேதியில் இருந்து பெரம்பலூர் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு அரியலூர் மாவட்டம் புதிதாக உதயமாகிறது'' என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த தி.மு.க. ஆட்சியில் 2000-ம் ஆண்டில் பெரம்பலூர் மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு அரியலூர் மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டது. அதன்பின் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் மீண்டும் பெரம்பலூர் மாவட்டத்துடன் அரியலூர் மாவட்டம் இணைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. இதையடுத்து பெரம்பலூர் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, அரியலூர் மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்ற அரியலூர், சுற்றுப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து, தமிழக அரசு அதனைப் பரிசீலித்து மாநிலத்தின் 31-வது மாவட்டமாக அரியலூர் மாவட்டத்தை (தலைமையிடம்- அரியலூர்) உருவாக்க முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக நேற்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம் உருவாக்கம் குறித்து வருவாய் துறை செயலாளர் அம்புஜ் சர்மா நேற்று வெளியிட்ட அரசாணையில், சட்டசபையில் கடந்த 25.7.2006 அன்று பேசிய முதலமைச்சர் கருணாநிதி, ``அரியலூர் மாவட்டம் மீண்டும் வரும்'' என்று கூறியிருந்தார். இந்த அறிவிப்பினைத் தொடர்ந்தும், உள்ளூர் மக்களின் வேண்டுகோளினை ஏற்றும், நிர்வாகக் காரணங்களுக்காகவும், புதிதாக அரியலூர் மாவட்டத்தை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து அரியலூர் மாவட்டத்தை உருவாக்க உத்தரவிடப்படுகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து அரியலூர், உடையார் பாளையம் ஆகிய 2 வருவாய் கோட்டங்களும், அரியலூர், உடையார் பாளையம், செந்துரை ஆகிய 3 தாலுகாக்களும் பிரிக்கப்பட்டு, புதிய அரியலூர் மாவட்டத்தில் சேர்க்கப்படுகின்றன. பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் வருவாய் கோட்டமும், பெரம்பலூர், குன்னம் மற்றும் வேப்பந்தட்டை ஆகிய தாலுகாக்களும் தொடர்ந்து நீடிக்கும்.
அரியலூரை தலைமையிடமாக கொண்டு இயங்க உள்ள இந்த மாவட்டம், நவம்பர் 23ஆம் தேதியில் இருந்து செயல்படத் தொடங்குகிறது. வருவாய் நிர்வாக சிறப்பு ஆணையர் பரிந்துரையை ஏற்று அங்கு ஊழியர் நியமனம் செய்யப்படுகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது 120 ஊழியர்கள் உள்ளனர். இரண்டு மாவட்டங்களும் சிறியவை என்பதால், கூடுதல் ஊழியர் நியமனம் செய்யாமல் பெரம்பலூரில் உள்ள ஊழியர்களில் சிலர் அரியலூர் மாவட்டத்துக்கு மாற்றப்படுகிறார்கள். இதன்படி, அரியலூர் மாவட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ள 73 பணியிடங்களுக்கு, பெரம்பலூரில் இருந்து 36 பேர் அரியலூருக்கு மாற்றப்படுகிறார்கள். மற்ற இடங்களுக்கு புதிய ஊழியர் நியமனம் செய்யப்படுகிறது.
அரியலூரில் உள்ள பல்துறை அலுவலக வளாகம், கலெக்டர் அலுவலகமாக இயங்கும். அங்கு புதிதாக ரூ.22.5 லட்சத்தில் 3 கார்களும், ஒரு ஜீப்பும் வாங்கப்படுகிறது. நாற்காலிகள் வாங்க ரூ.13.85 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.