''தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை தொடரும்'' என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறுகையில், தமிழக கடல் பகுதியில் உள்ள வளிமண்டலத்தின் மேல் அடுக்குகளில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகத்தின் பல பகுதிகளில், குறிப்பாக வட மாவட்டங்களில் மழை பெய்யும்.
காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், நாகை, தஞ்சை, திருவாரூர் உட்பட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னை நகரை பொறுத்தவரை வானம் மேகமூட்டமாக இருக்கக் கூடும். நகரில் சில இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறினார்.
சென்னையில் அடை மழை:
இதற்கிடையே, சென்னையில் நேற்றிரவு முதலே கன மழை பெய்து வருகிறது. இன்று காலை வரை தொடர்ந்த அடை மழையால் நகரின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மழை தொடர்ந்து பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அலுவலகம் செல்வோர், பள்ளி-கல்லூரிக்குச் செல்லும் மாணவ-மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
நேற்று பெய்த மழை அளவு வருமாறு: தாம்பரம் 2 செ,மீ., சென்னை விமான நிலையம், காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம், திருவள்ளூர் மாவட்டம் பூவிந்தமல்லி, கொரட்டூர், விழுப்புரம் மாவட்டம் பரங்கிப்பேட்டை, திண்டிவனம், நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஆகிய இடங்களில் தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது.