''இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்தை சேர்ந்தவருக்கு ஆட்சியில் இருப்பவர்கள் இரங்கற்பா பாடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது'' என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் எம்.கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
கடந்த மாதம் 29ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் நடந்த கொலை வெறித்தாக்குதலில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று குணமடைந்த நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் எம்.கிருஷ்ணசாமி இன்று சத்தியமூர்த்தி பவனில் நடந்த மறைந்த பிரதமர் இந்திராகாந்தியின் 90வது பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டார்.
பின்னர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்திராகாந்தியின் பிறந்த நாளான இன்று தமிழக அரசு இந்திராகாந்தி முதியோர் ஓய்வூதிய தேசிய திட்டத்தை தொடங்கி இருப்பதற்காக தமிழக அரசுக்கும், முதலமைச்சருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
என்மீது நடந்த தாக்குதல் தொடர்பாக குழு அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் சிலரை கைது செய்துள்ளனர். சரியான குற்றவாளிகளை கண்டுபிடித்து சட்டப்படி தண்டனை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அரசியல்வாதிகள் தொடர்ந்து தாக்கப்படும் நிலைமையை நீடிக்க விடக்கூடாது. சத்தியமூர்த்தி பவனில் தாக்குதல் நடத்துவதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. யாராக இருந்தாலும் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்.
விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கற்பா பாடியிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்தை சேர்ந்தவருக்கு ஆட்சியில் இருப்பவர்கள் இரங்கற்பா பாடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தடை செய்யப்பட்ட இயக்கத்தினருக்காக சிலர் கூட்டம் நடத்துவதையும் வன்மையாக கண்டிக்கிறோம்.
இந்த பிரச்சனையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை நல்லமுறையில் செம்மைப்படுத்துவார்கள் என்று நம்புகிறேன். அமைதிப் பூங்காவாக இருக்கும் தமிழகத்தில் வன்முறை தலைதூக்க அனுமதிக்கக் கூடாது.
சத்தியமூர்த்தி பவனில் நடந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கை என் மகனாக இருந்தாலும் சட்டப்படி அதனை சந்திக்க வேண்டியதுதான் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி கூறினார்.