கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை செல்லும் பறக்கும் ரயிலை, முதல்வர் கருணாநிதி நாளை வேளச்சேரியில் துவக்கி வைக்கிறார்.
கடற்கரையிலிருந்து வேளச்சேரி வரை பறக்கும் ரயில் திட்ட துவக்க விழா வேளச்சேரி ரயில் நிலையத்தில் நாளை மாலை நடக்கிறது. பறக்கும் ரயில் போக்குவரத்தை முதல்வர் கருணாநிதி தொடங்கி வைக்கிறார்.
கடற்கரைவேளச்சேரிக்கு 58 தடைவையும், வேளச்சேரி கடற்கரைக்கு 58 தடவையும் என மொத்தம் 116 தடவை இயக்கப்பட உள்ளன. கடற்கரையில் இருந்து புறப்படும் ரயில், பூங்கா நகர், சிந்தாதிரிப்பேட்டை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, கலங்கரை விளக்கம், மயிலாப்பூர், மந்தைவெளி, கிரீன்வேஸ்ரோடு, கோட்டூர்புரம், கஸ்தூரிபாய் நகர், இந்திரா நகர், திருவான்மியூர், தரமணி, பெருங்குடி வழியாக வேளச்சேரி செல்லும்.
நெரிசல் நேரங்களில் 10 முதல் 15 நிமிடத்துக்கு ஒரு ரயிலும், நெரிசல் இல்லாத நேரங்களில் 20 நிமிடத்துக்கு ஒரு ரயிலும் இயக்கப்படுகிறது. கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கு 40 நிமிடத்தில் பறக்கும் ரயில் போய் சேரும்.
கடற்கரையில் இருந்து சிந்தாதிரிப்பேட்டை வரை குறைந்தபட்சமாக ரூ.4ம் கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கு அதிகப்பட்சமாக ரூ.7ம் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. கடற்கரையில் இருந்து திருவான்மியூர், பெருங்குடி, வேளச்சேரி ஆகிய இடங்களுக்கு செல்ல ரூ.7 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
திருவான்மியூரில் இருந்து வேளச்சேரிக்கு ரூ.5 கட்டணமும், பெருங்குடியில் இருந்து வேளச்சேரிக்கு ரூ.5 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஞாயிற்றுக் கிழமைகளில் இருமார்க்கத்திலும் தலா 14 தடவை ரயில் போக்குவரத்து குறைக்கப்பட்டு 88 தடவை இயக்கப்படுகின்றன.