''அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காததால் தமிழ் நாட்டில் அறிவிக்கப்படாத மின் வெட்டு அமலில் இருந்து வருவதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு மின்சார வாரியம் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை முறையாக விநியோகம் செய்யாமலும், கூடுதல் மின் உற்பத்தியில் கவனம் செலுத்தாமலும் இருப்பதால் ஒரு நாளைக்கு மொத்தம் 6 மணி நேரம் மட்டுமே மின்சாரம் வழங்கப்படுவதாகவும், அதுவும் ஒரு மணி நேரம், 2 மணி நேரம் என்று இடைவெளிவிட்டு மின்சாரம் வழங்கப்படுவதாகவும் பல்வேறு தரப்புகளில் இருந்து புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.
தற்போது அறிவிக்கப்படாத மின் வெட்டு தொடர்ந்து நிலவி வருகிறது. மின் பற்றாக்குறை இருக்கும் போதே பராமரிப்புப் பணிகள் என்று சில யூனிட்டுகளின் உற்பத்தியை நிறுத்திவிடுகிறார்கள். 8 மணி நேரம் மின்சாரம் என்பது விவசாயிகளுக்கு எட்டாக்கனியாக இருந்து வருகிறது. இதனால் விவசாயம் நசிந்துபோவதோடு, விவசாயத் தொழி லாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் நிலவி வரும் அறிவிக்கப்படாத மின்சார வெட்டைப் போக்கிட நடவடிக்கை எடுக்காமல் மெத்தனப்போக்கோடு இருந்து வரும் தி.மு.க. அரசுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு முழுவதும் முழுமையான மின்சாரம் கிடைக்க அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.