திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளரை மர்ம கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டிக் கொன்றது. அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளதால் ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியை அடுத்த பூண்டியை சேர்ந்தவர் கலைச் செல்வன். இவர் திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளராகவும், மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவராகவும் இருந்தார். இவரது வீட்டு முன்பு இன்று காலை 9 மணிக்கு டாடா சுமோ கார் ஒன்று வந்து நின்றது. காரில் இருந்து 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று கீழே இறங்கியது. அப்போது வீட்டில் உள்ளவர்களிடம், நாங்கள் திருமண பத்திரிகை கொடுக்க வந்துள்ளோம் என்று அவர்கள் கூறினர். அப்போது கலைச் செல்வனின் உதவியாளர் சற்று இருங்கள் என கூறி விட்டு வீட்டிற்குள் சென்றார்.
அப்போது, 6 பேரும் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து மேலே சுட்டனர். துப்பாக்கி சத்தம் கேட்டு வீட்டின் உள்ளே இருந்த கலைச்செல்வன் வெளியே வந்தார். அப்போது அந்த கும்பல் கலைச்செல்வன் மீது துப்பாக்கியால் சுட்டுவிட்டு அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் அவரது தலை, கை, கால் பகுதிகளில் பலத்த வெட்டு விழுந்தது.
பின்னர் அந்த 6 பேர் கும்பல் அங்கிருந்து காரில் தப்பி சென்றது. உயிருக்கு போராடிய கலைச்செல்வனை திருவாரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். தகவல் அறிந்த பால் வளத்துறை அமைச்சர் மதிவாணன், ஏராளமான தி.மு.க.வினர் மருத்துவமனையில் குவிந்தனர்.
சில ஆண்டுக்கு முன்பு கொரடாச்சேரி அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் சம்பத் வெட்டி கொல்லப்பட்டார். இதில் தொடர்பு இருப்பதாக கூறி கலைச்செல்வன் மீது கொலை வழக்கு கொரடாச்சேரி காவல்நிலையத்தில் உள்ளது. பழிப்பழியாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று காவல்துறையினர் கருதுகின்றனர். இந்த கொலை சம்பவத்தால் திருவாரூர் மாவட்டத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த கொலை குறித்து கொரடாச்சேரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
இந்தநிலையில் பூண்டி கலைச்செல்வன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தி.மு.க. நிகழ்ச்சிகள் மூன்று நாள் கைவிடப்பட்டுள்ளது என்று தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் கொரடாச்சேரிக்கு விரைந்துள்ளனர்.