''ரேஷன் அரிசி கடத்தல் குறித்து மத்திய புலனாய்வுக் கழக விசாரணைக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்பதை வலியுறுத்தி, அதற்கான நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ளுமாறு தமிழக அரசின் சார்பில் மத்திய புலனாய்வுக் கழக இயக்குனருக்கு கடிதம் எழுதப்படும்'' என்று உணவு அமைச்சர் எ.வ.வேலு கூறியிருக்கிறார்.
இது குறித்து உணவுத்துறை அமைச்சர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரியில் சில நாட்களுக்கு முன்பு பிடிபட்ட அரிசி தி.மு.க. ஆட்சிக்காலத்தில் கடத்தப்பட்டது அல்ல என்றும், முன்பிருந்த அ.தி.மு.க. ஆட்சியில் கடத்தப்பட்ட அரிசி என்றும் நான் விடுத்த அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில், அனந்தம்மாள் காசி எக்ஸ்போர்ட்ஸ் என்ற நிறுவனம் ஓர் ஆண்டுக்கு முன்பாகத்தான் அரிசிக் கிடங்கை வாடகைக்கு எடுத்துள்ளது என்று தெரிவித்திருக்கிறார்.
2006ஆம் ஆண்டு மே திங்கள் 13 ஆம் நாள் தான் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றது என்ற நிலையில், 2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் கடன் பெற்றிருக்கிறார்கள் என்கிறபோது அந்தத் தேதிக்கு முன்புஅரிசி கடத்தப்பட்டிருந்தால் தானே, அதனை அடமானமாக வைத்திருக்க முடியும்?
கடத்தப்பட்ட அரிசி கைப்பற்றப்பட்டு வழக்கும் தொடரப்பட்டுள்ளது. அதற்கான விசாரணை நடைபெறவுள்ளது. அப்போது முழு உண்மைகளும் வெளிவரவுள்ளது. எனினும் இதிலே மத்திய புலனாய்வுக் கழகம் (சி.பி.ஐ.) விசாரணை நடத்த வேண்டுமென்று எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா சொல்லியிருக்கிறார். இந்த அரசைப் பொறுத்தவரை எங்களுக்கு மடியிலே கனம் இல்லை. எனவே வழியிலே பயம் இல்லை.
அவர் கோரியபடியே இந்த விவகாரம் குறித்து மத்திய புலனாய்வுக் கழக விசாரணைக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்பதை வலியுறுத்தி, அதற்கான நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ளுமாறு தமிழக அரசின் சார்பில் மத்திய புலனாய்வுக் கழக இயக்குனருக்கு கடிதம் எழுதப்படும். அந்த விசாரணையின் போது, அரிசி எந்த ஆட்சிக்காலத்தில் கடத்தப்பட்டது, அதில் சம்பந்தப்பட்டவர்கள் யார் என்ற விவரங்கள் எல்லாம் நாட்டு மக்களுக்கு தெளிவாகும் என்று உணவுத்துறை அமைச்சர் வேலு கூறியுள்ளார்.