''2001-ல் ஆட்சிக்கு வந்தவுடன் அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி முந்தைய மாநில அரசின் பரிந்துரை விலையை நிர்ணயம் செய்ய மாட்டோம் என்று தீர்மானித்து தமிழக விவசாயிகளை ஏமாற்றியவர்தான் ஜெயலலிதா'' தமிழக வேளாண் மைத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் குற்றம்சாற்றியுள்ளார்.
இது தொடர்பாக வேளாண்மைத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயிகளுக்கு கரும்புக்கு பணம் கொடுக்கவில்லை என்று 9 இடங்களில் போராட்டம் நடத்துவதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்திருப்பது வேடிக்கையாக உள்ளது. 2006-07 ஆம் ஆண்டு கரும்புகளுக்கு கூட்டுறவு, பொதுத்துறை, ஆலைகளில் அரைக்கப்பட்ட கரும்புகளுக்கு மத்திய, மாநில அரசுகள் அறிவித்திருந்த விலைக்கான தொகைகள் வழங்கப்பட்டு விட்டன.
தனியார் ஆலைகள் தாங்கள் அரவை செய்த கரும்புகளுக்கு பணம் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஜெயலலிதா சொல்வதைப் போல ரூ.250 கோடி தனியார் சர்க்கரை ஆலைகள் ஏமாற்றுவதாக சொல்லுவது உண்மைக்கு மாறானது. ரூ.102 கோடிதான் தர வேண்டியுள்ளது. இதில் 16.70 கோடிதான் 90 நாட்களுக்கு மேல் வழங்கப்படாத தொகையாகும். இதுவும் விவசாயிகளுக்கு உடனே வழங்க தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு அறிவுரை வழங்கப் பட்டுள்ளது.
2001-ல் ஆட்சிக்கு வந்தவுடன் அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி முந்தைய மாநில அரசின் பரிந்துரை விலையை நிர்ணயம் செய்ய மாட்டோம் என்று தீர்மானித்து தமிழக விவசாயிகளை ஏமாற்றியவர்தான் ஜெயலலிதா. நடப்பாண்டில் பதிவு செய்யாத கரும்பினை கூட்டுறவு, பொதுத்துறை, தனியார் ஆலை பகுதிகளில் 8 லட்சம் டன்னுக்கு மேல் அரவை செய்து விவசாயிகள் மகிழ்ச்சியடையச் செய்தவர் முதல்வர் கருணாநிதி. இதைப்போல அ.தி.மு.க. அரசு எந்த ஆண்டிலாவது பதிவு செய்யாத கரும்பினை அரவை செய்ததுண்டா?
அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தான் கரும்பு ஏற்றிச் செல்லும் லாரி வாடகையை ஆலைகளே கொடுக்க, அரசு ஆணையிட்டதாக ஜெயலலிதா கூறுவது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல உள்ளது. தி.மு.க. ஆட்சியில்தான் கரும்பு வண்டி வாடகையை முழுவதுமே ஆலைகளே ஏற்க வேண்டுமென ஆணையிடப் பட்டதை கரும்பு விவசாயிகள் அறிவார்கள். அவர்களை ஏமாற்றி அரசியல் லாபம் அடையமுடியாது என எச்சரிக்கை செய்கிறேன் என்று வேளாண்மைத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கூறியுள்ளார்.