கட்டாய கிராமப்புற சேவை, மருத்துவ படிப்பு காலத்தை 6 ஆண்டாக உயர்த்துவதை எதிர்த்து மருத்துவக்கல்லூரி மாணவர்கள் இன்று போராட்டம் நடத்தினர்.
கட்டாய கிராமப்புற சேவை, மருத்துவ படிப்பு காலத்தை 6 ஆண்டாக உயர்த்துவதை எதிர்த்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களும் இன்று வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்திற்குள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பயிற்சி மருத்துவர்களும் பங்கேற்றனர்.
சென்னையில் ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம், அரசு பொது மருத்துவமனை ஆகிய மருத்துவ கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து விட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 600க்கும் மேற்பட்ட மாணவர்களும், பயிற்சி மருத்துவர்களும் கைகளில் அட்டைகளை ஏந்தி கோஷம் எழுப்பினார்கள்.
வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் குறித்து மாணவர் பிரதிநிதி சதீஷ் கூறுகையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணியிடம் பலதடவை பேச்சுவார்த்தை நடத்தினோம். கொடுத்த வாக்குறுதிகளை மத்திய அமைச்சர் நிறைவேற்றவில்லை. கிராமப்புற கட்டாய சேவை வரும் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்றும். இதற்கான மசோதாவையும் வரும் பாராளுமன்ற கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் என்றும் கூறி உள்ளார்.
மத்திய அமைச்சர் அன்புமணி எங்கள் கோரிக்கைகளுக்கு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும். அவர் கொடுக்கும் விளக்கத்திற்கு ஏற்ப வரும் 19ஆம் தேதி முதல் எங்கள் போராட்டம் தீவிரப்படுத்தப்படும். தமிழக முதலமைச்சர் இப்பிரச்சினையில் தலையிட்டு மாணவர்களை அழைத்து பேசி சுமூக தீர்வு காண வேண்டும். முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்தும் மனு கொடுக்க இருக்கிறோம் என்று மாணவர் பிரதிநிதி சதீஷ் கூறினார்.