''ரேஷன் அரிசி கடத்தல் குறித்து மத்திய புலனாய்வு கழகம் (சி.பி.ஐ.) விசாரணை நடத்தப்பட வேண்டும்'' என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதைத் தடுப்பதற்காக அரிசி கடத்தலில் ஈடுபடுபவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்தார். இந்த அறிவிப்பு வெறும் கண்துடைப்பு நாடகமாகவே இருக்கிறது. அரிசிகள் தனியார் லாரிகள், வேன்கள் மூலமாக கடத்தப்படுவதை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் தற்போது ரயில் மூலமாக ரேஷன் அரிசி கடத்தப்பட்டிருக்கிறது.
ஓர் ஆண்டிற்கு மேல் அரிசியை கிடங்கில் வைத்து பாதுகாக்க முடியாது என்பது விஞ்ஞான பூர்வமான ஒன்று. உண்மை இவ்வாறிருக்க, தற்போது கடத்தப்பட்டுள்ள அரிசியை இரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய அரிசி என்று கூறுவது ஏற்கத்தக்கதல்ல. இரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய அரிசியாக இருந்தால் அது உண்ணும் நிலையில் இருக்காது என்பதை எல்லாம் யோசித்து பார்க்காமல் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் தமிழக அமைச்சர் வேலு பேசுவது ஒரு திசை திருப்பும் முயற்சியே ஆகும்.
அரிசி கடத்தல்காரர்களை இந்த வழக்கிலிருந்து தப்ப விடுவதற்காகவே தமிழக அமைச்சர் இவ்வாறெல்லாம் பேசி வருகிறார் என்பது தெளிவாகிறது. இந்தக் கடத்தல் பல மாநிலங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனை என்பதால், இது குறித்து மத்திய புலனாய்வு கழகம் (ம.பு.க.) விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இந்தக் கடத்தல் சம்பவம் குறித்து ம.பு.க. விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று 3.11.2007 அன்று புதுச்சேரி அ.தி.மு.க. சார்பில் மத்திய உள்துறை அமைச்சருக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.