துபாயில் மேம்பாலம் இடிந்து விழுந்ததில் பலியான 3 தமிழர்களின் உடல்கள் இன்று அதிகாலை சென்னைக்குக் கொண்டுவரப்பட்டன. பின்னர் அவசர ஊர்திகளில் அவர்களது சொந்த ஊருக்கு எடுத்து கொண்டு செல்லப்பட்டது.
துபாயில் மரினா பகுதி சுபோக் சாலையில் மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. கடந்த 8ஆம் தேதி நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென்று பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 7 பேர் பலியானார்கள். பலர் படுகாயம் அடைந்தனர்.
பலியானவர்களில் 5 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். அவர்களது உடல்களை தமிழகம் கொண்டு அரசு நடவடிக்கை எடுத்தது. ஆனால் 3 பேரின் உடல்கள் எமிரேட்ஸ் ஏர்வேஸ் விமானம் மூலம் இன்று அதிகாலை 3.30 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. மற்ற இரண்டு பேரின் உடல்கள் நாளை கொண்டு வரப்படலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பலியான கார்த்திகேயன் தங்கம் (32), திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள மூங்கில்பட்டியைச் சேர்ந்தவர். மதியழகன் ராமலிங்கம் (28), தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள காவாரப்பட்டை சேர்ந்தவர். அருள் மொழி ( 27) கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர். மூன்று பேரின் உடல்களும் அவசர ஊர்தியில் அவரவர் ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.