”பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கான தொடக்க விழாவை ஆந்திர அரசு அடுத்த மாதம் 6ஆம் தேதி நடத்த விருப்பது குறித்து உச்ச நீதிமன்றத் தில் தமிழக அரசு முறையீடு செய்யும்'' என்று தமிழக சட்டம், பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
”ஆந்திர மாநிலம், குப்பம் மண்டலத்திலுள்ள கணேசபுரம் என்ற இடத்தில் அடுத்த மாதம் 6ஆம் தேதி பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கான தொடக்க விழா நடைபெறும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி பாலாற்றின் குறுக்கே அணை கட்டப்போவதாக ஆந்திர அரசு அறிவித்திருப்பது தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது.
பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டுவதை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு முடியும் வரை பாலாற்றில் ஆந்திர அரசு அணை கட்டக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டூள்ளது. இந்த வழக்கு விசாரணை வரும் பிப்ரவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் அணை கட்டுவதற்கான தொடக்க விழா குறித்து ஆந்திராவின் அறிவிப்பு வெளிவந்து உள்ளது. எனவே இந்த வழக்கு விசாரணையை அதற்கு முன்னதாகவே நடத்தி தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்குமாறு உச்ச நீதிமன்றத்தை தமிழக அரசு கேட்டுக்கொள்ளும்.
இது தொடர்பாக மத்திய அரசுக்கும் தமிழக அரசு கடிதம் எழுத உள்ளது. அடுத்த வாரம் நான் டெல்லிக்கு செல்லும் போதும் இது பற்றி மத்திய அமைச்சர்களுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளேன்” என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுதற்கான அடிக்கல் நாட்டு விழா தமிழக மக்களின் நலனுக்கு எதிரானதாகும். ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை உடனடியாக தடுக்க வலியுறுத்தி அ.தி.மு.க. சார்பில் வரும் 26ஆம் தேதி வேலூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார்.