சிறையில் அடைக்கப்பட்டுள்ள வைகோ, பழ.நெடுமாறன் உள்ளிட்டோரை விடுதலை செய்யக்கோரி திருச்சி, வேலூரில் இன்று ம.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இலங்கை ராணுவத் தாக்குதலில் பலியான விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் சு.ப. தமிழ்ச்செல்வனுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் சென்னையில் அமைதிப் பேரணி நடத்த ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் உள்பட பலர் கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்யக் கோரி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ம.தி.மு.க.வினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருச்சியில் ரயில் சந்திப்பு அருகே மாவட்ட செயலாளர் மலர்மன்னன் தலைமையில் ம.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதேபோல் வேலூர் மாவட்ட ம.தி.மு.க. சார்பில் மாநில அமைப்பு செயலாளர் என்.சுப்பிரமணி, வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் பி.என்.உதயகுமார் உள்பட ஏராளமான தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.